நீலகிரி மாவட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதையொட்டி சமவெளியில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வர தொடங்கி உள்ளன. அவை குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையை அவ்வப்போது கடந்து செல்கின்றன. மேலும், வாகனங்களை மறித்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன.
இந்த நிலையில் சமவெளியில் உள்ள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஐந்து காட்டு யானைகள் கொண்ட கூட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார், கே.என்.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன. மேலும் சாலையில் உலா வருகின்றன.
இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள வனத்துறையினர், “பலாப்பழ சீசன் நிலவுவதால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் கோடை சீசன் தொடங்கி உள்ளதால், சுற்றுலா வாகனங்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காட்டு யானைகளை கண்டால் கீழே இறங்கி செல்ஃபி எடுப்பது, சீண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
**-ராஜ்-**
.