அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், குடிசை மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள், விசைத்தறி, தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக பிரிவுகளில் ஒருமுனை மின் இணைப்புக்கு கட்டணம் ரூ.250ல் இருந்து ரூ.500 ஆக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மின் வாரியம். இதே பிரிவுகளில் மும்முனை இணைப்பிற்கு ரூ.500ல் இருந்து ரூ.750 முதல் ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது.
இதுபோன்று தாழ் வழுத்த ஒரு முனை வீட்டு மின் இணைப்புக்கு ரூ.1,600 ஆக இருந்த கட்டணம் தற்போது சென்னையில் ரூ.6,400 ஆகவும், மற்ற இடங்களில் ரூ 2,818 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், மும்முனை இணைப்புக்கு ரூ.6,850 ஆக இருந்த மின் கட்டணம் தற்போது சென்னையில் ரூ 15,968 ஆகவும், மற்ற இடங்களில் ரூ. 11,568 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மீட்டர் இடமாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தி மின் வாரியம் நேற்று (அக்டோபர் 6) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குப் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதுடன். இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மின் இணைப்புக்கான கட்டணங்களை 300 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பெரும் சுமையாகிவிடும். இந்தக் கட்டண உயர்வை பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது,
“வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் இரு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளன. பொருளாதார மந்தநிலை நிலவும் காலத்தில் இந்த கட்டண உயர்வு மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும். எனவே அவற்றை அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.�,