{இடைத்தேர்தல்: மற்ற மாநிலங்களின் நிலவரம் என்ன?

Published On:

| By Balaji

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகளே முன்னிலை வகிக்கிறது.

இடைத்தேர்தல் நடைபெற்ற 18 மாநிலங்களில் 51 சட்டமன்ற இடங்களுக்கும், இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்களிப்பு நடைபெற்றது. உத்திர பிரதேசம், குஜராத், கேரளா, பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று(அக்.24) காலை முதல் நடைபெற்று வருகிறது.

**உத்திர பிரதேசம்**

உத்திர பிரதேசத்தில் பாஜக 6 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், பகுஜன் சமாஜ் 1 தொகுதியிலும், அப்னா தளம் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

**இமாச்சல பிரதேசம்**

ஆளும் பாரதிய ஜனதா கட்சி இமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள தர்மசாலா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் விஷால் நெஹ்ரியா தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ராகேஷ் குமாரை விட, 6,673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

**சிக்கிம்**

சிக்கிம் போக்லோக்-கம்ராங் தொகுதியில் நடைபெற்ற இடைதேர்தலில், நான்காவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி கட்சித் தலைவரும் சிக்கிம் முதல்வருமான பிரேம் சிங் தமங் 1292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சிக்கிம் ஜனநாயக கட்சியின் மோசஸ் ராய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சிக்கிமில் முதல் முறையாக மார்ட்டம்-ரும்தேக் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.

**கேரளா**

கேரளாவில் 5 இடங்களில் நடைபெற்ற தேர்தலில், வட்டியூர்காவு தொகுதியில் 14,251 வாக்குகள் பெற்று இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. கோனி தொகுதியிலும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 10,031 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. மற்ற 3 இடங்களான அரூர், எர்ணாகுளம், மஞ்சேஷ்வரம் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸூம் முன்னிலை பெற்றுள்ளது.

**இதர மாநிலங்களின் நிலை**

பிஹாரில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஓரிடத்திலும் 2 தொகுதிகளில் மற்ற கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன. அசாமில் 4 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும், ஓரிடத்தில் ஐக்கிய ஜனநாயக கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

பஞ்சாபில் 4 தொகுதிகளில் 3ல் காங்கிரஸூம், ஓரிடத்தில் அகாலிதளமும் முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தானில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் ஓரிடத்திலும் ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி ஓரிடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமதி முன்னிலை வகிக்கிறது.மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தலா ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மேகாலயாவில் ஐக்கிய ஜனநாயக கட்சி முன்னிலை வகிக்கிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share