sதேர்தல் தேதி : திசை திருப்புகிறாரா பிரதமர்?

Published On:

| By Balaji

தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. .

தலைமைத்தேர்தல் ஆணையத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் செய்பாலி பி. சரண் இன்று மதியம் இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவன் கட்டடத்தில் மாலை 4.30 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையத்தால், அசாம், கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாக இது போன்ற அறிவிப்புகளை நாடு முழுவதுமுள்ள செய்தித் தொலைக்காட்சிகள் நேரடியாகவும் ஒளிபரப்பும். ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டிய நிலையில், தூர்தர்சன் மற்றும் ஏ.என்.ஐ. செய்திநிறுவனம் ஆகியவை, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

மேலும் ஒரு செய்தி நிறுவனத்துக்கு ஒரு குழுவை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் கறாராகக் கூறியிருக்கின்றனர்.

ஒளிப்படக்காரர்களைப் பொறுத்தவரை அரசின் புகைப்படப் பிரிவு மற்றும் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, திடீரென இன்றைக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாவதை நாடு முழுவதும் உள்ள முன்னணி கட்சிகள் பலவும் எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழகத்திலும் இந்த நிலையே நிலவியது.

முன்னதாக, பிப்ரவரி கடைசிவாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. 48 நாள்களுக்கு முன்னர் பொதுவாக பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படுவது வழக்கம் என்பதால், இப்படி நடக்கும் என்றே பரவலாக எதிர்பார்ப்பும் இருந்துவந்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகே பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாநில அரசு கூறிவந்தது. அதன் தொடர்ச்சியாக, மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 22ஆம் தேதி அசாம் மாநிலத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, மார்ச் முதல் வாரத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வெளியாகலாம் என்று சூசகமாகக் கூறினார்.

அசாமின் தேமாஜி மாவட்டத்தில் நடைபெற்ற அரசுத் திட்ட தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கடந்த 22ஆம் தேதி கலந்துகொண்டபோது, ”கடந்த முறை 2016ஆம் ஆண்டில் மார்ச் 4ஆம் தேதியன்று சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது; அதைப்போல இந்த முறையும் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.

பிரதமரே சொல்லிவிட்டார் என்பதால், மார்ச் முதல்வாரம் வரை அதிகாரபூர்வமற்ற பிரச்சாரத்தையும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வேலைகளையும் இன்னும் செய்யமுடியும் என பல முன்னணி கட்சிகளும் நினைத்திருந்தன. அந்த நினைப்பில் மண்ணைப் போட்டதைப்போல அவரின் பேச்சு அமைந்துவிட்டது என பல கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்கிற பாணியை பிரதமர் மோடியும் கையில் எடுத்துவிட்டாரோ?!

கொரோனா கட்டுப்பாடுகளில் மத்திய அரசுத் தரப்பில் ஒரு பக்கம் கறார் காட்டப்பட்டாலும், பல மாநிலங்களில் மத்திய அரசின் நிகழ்ச்சிகளிலேயே கட்டுப்பாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுவதையும் காட்சி ஊடகங்களில் சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் அவசர அவசரமாக அறிவிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, அதையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்றும் டெல்லி செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share