xபிறந்தநாள்: அம்மாவின் மனதை குளிர்வித்த மகன்!

Published On:

| By Balaji

நாம் ஒவ்வொருவருக்கும், நமது தாய் தந்தையருக்கு அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பது மிகப் பெரிய கனவு மற்றும் ஆசையாகும். வேலைக்குச் செல்லும் பிள்ளைகள் தங்களது ஊதியத்தில் பரிசு வாங்கித் தருவார்கள். அதுவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் சேர்த்து வைக்கும் பாக்கெட் மணியிலிருந்து தங்களால் முடிந்ததை வாங்கித் தருவார்கள்.

அந்தவகையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தனது 5 வயது முதலே சேர்த்து வைத்திருந்த சில்லறை நாணயங்களை வைத்து தனது அம்மாவுக்கு ஃபிரிட்ஜ் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

ஜெய்ப்பூர் அருகே, ஜெய்சஹாரா நகரில் வசிக்கும் ராம் சிங், என்பவர் தனது அம்மா பப்பு தேவிக்குப் பிறந்தநாள் பரிசளிக்க திட்டமிட்டுள்ளார். செய்தித்தாள் ஒன்றில் ஃபிரிட்ஜ் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு, அந்த கடையின் உரிமையாளருக்குத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டுள்ளார். அப்போது என்னால் நாணயங்களால் மட்டுமே பணம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். நாணயம் என்றதும் முதலில் கடை உரிமையாளர் மறுத்துள்ளார். பின்னர் தனது அம்மாவின் பிறந்தநாள் என்றும். பரிசளிக்க விரும்புவதாகவும் கூறி தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் ராம் சிங். இதையடுத்து ஃப்ரிட்ஜ் தர ஒப்புக்கொண்டுள்ளார் கடை உரிமையாளர்.

சுமார் 12 ஆண்டுகளாக, தான் சேகரித்த 35 கிலோ எடை கொண்ட ரூ .13,500 மதிப்புள்ள நாணயங்களை ஒரு சாக்கில் கட்டி எடுத்துக் கொண்டு ஷிவ் சக்தி நகர் பகுதியிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். எனினும் ஃப்ரிட்ஜ் வாங்குவதற்கு ரூ.2000 பற்றக்குறையாக இருந்துள்ளது. ராம் சிங் அவரது அம்மா மீது வைத்துள்ள பாசத்தையும், எப்படியாவதும் பரிசு கொடுத்துவிட வேண்டும் என்று விரும்பியதையும் கண்ட கடை உரிமையாளர் அவருக்குப் பற்றாக்குறையாக இருந்த அந்த 2000 ரூபாயைத் தள்ளுபடி செய்து வழங்கியுள்ளார், இதையடுத்து வீட்டுக்கு ஃப்ரிட்ஜை எடுத்துச் சென்ற ராம் சிங் அம்மாவிடம் கொடுத்து அசத்தியுள்ளார்.

”பானைகளில் தனது சேமிப்பை வைத்திருந்ததாகவும், அதனை முழுமையாக எண்ணி முடிக்க தனக்கு 4 மணி நேரம் ஆனதாகவும், ஆனால், கடை உரிமையாளர், தான் சொல்வதை நம்புவதாகக் கூறி நாணயங்கள் முழுவதையும் எண்ணாமல் வெறும் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை மட்டும் எண்ணிவிட்டுப் பெற்றுக் கொண்டார்” என்றும் ராம் சிங் கூறுகிறார்.

”என் மகன் எனக்கு இதுபோன்ற மறக்கமுடியாத பரிசை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மகன் என் விருப்பங்களைப் பற்றி நினைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். கடவுள் அத்தகைய குழந்தைகளை அனைவருக்கும் கொடுக்கட்டும் என ராம் சிங்கின் தாய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share