புதுச்சேரி ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 11) ரத்து செய்தது.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயண சாமிக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. கிரண் பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் கோப்புகளைத் தடுத்து நிறுத்துவது, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதற்கிடையே, அரசின் நடவடிக்கைகளில் தலையிடத் துணைநிலை ஆளுநருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரான லட்சுமி நாராயணன் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு உள்துறை அமைச்சகம் மற்றும் கிரண் பேடி சார்பில் தனித் தனியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் மத்திய அரசு உத்தரவை எதிர்த்து, புதுச்சேரி அரசு வழக்குத் தொடராத நிலையில், எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, துணை நிலை ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையே பிரச்சினை இருந்தால் அதில் மத்திய அரசு தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
**கவிபிரியா**�,