16.8% வளர்ச்சியடைந்துள்ள எட்டு உள்கட்டமைப்பு துறைகள்!

Published On:

| By Balaji

இந்தியாவில் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகள் 16.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா மற்றும் அதைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பல்வேறு துறைகள் கடந்த ஆண்டு வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய முக்கியமான எட்டு உள்கட்டமைப்பு துறைகள் கடந்த மே மாதத்தில் 21.4 சதவிகிதம் வீழ்ச்சியடைந்திருந்தன.

ஆனால் இந்த ஆண்டு அதே காலகட்டமான கடந்த மே மாதத்தில் அந்தத் துறைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக 16.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் கூறியுள்ளன.

அந்தவகையில் இயற்கை எரிவாயு 20.1 சதவிகிதம், சுத்திகரிப்பு பொருட்கள் 15.3 சதவிகிதம், உருக்கு இரும்பு 59.3 சதவிகிதம், சிமென்ட் 7.9 சதவிகிதம் மற்றும் மின்சாரம் 7.3 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதைப்போல நிலக்கரி துறையும் கடந்த ஆண்டு 14 சதவிகிதத்தைப் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 6.8 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. எனினும் உரம் மற்றும் கச்சா எண்ணெய் துறைகள் இந்த ஆண்டும் எதிர்மறை வளர்ச்சியையே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share