கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. இதற்காகப் பக்தர்கள் அக்டோபர் 21ஆம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில், முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் போர்டு தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனக் கேரள அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், அணைகளைக் கண்காணிக்க வேண்டும், ஆபத்தான பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்டு முகாம்களுக்கு அனுப்ப வேண்டும், முகாம்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.
அதோடு, நாளை மறுநாள் கல்லூரிகள் திறக்கப்பட இருந்த நிலையில், அதுவும் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று நிலச்சரிவு, வெள்ளம், சாலைகள் அடைப்பு ஆகியவற்றின் காரணமாகச் சபரிமலையில் பக்தர்களுக்கு இரு நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17 மற்றும் 18ஆகிய தேதிகளில் பக்தர்கள் வருகை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள சபரிமலை நிர்வாகம் ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள், இந்த பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பால் ஏற்கனவே தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து சபரிமலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
**-பிரியா**
�,