தரணி தங்கவேலு
*வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா (Surrogacy Regulation Bill) மீது தீவிரமான விமர்சனங்கள் எழுந்தன. பல சுற்று ஆலோசனைகளுக்குப் பின், மாநிலங்களவையின் தேர்வுக்குழு பரிந்துரைகளை மத்திய கேபினட் ஏற்றுக்கொண்டுள்ளது. நீண்ட காலமாகக் கிடப்பிலிருக்கும், இனப்பெருக்க உதவி தொடர்பான பல ஒழுங்குபடுத்துதல்கள் உள்ளடங்கிய இனப்பெருக்க உதவித் தொழில்நுட்ப மசோதாவுக்கும் (Assisted Reproduction Technology Bill) கேபினட்டின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்திய அரசு இனப்பெருக்க உதவி தொடர்பான சட்டங்களைக் கொண்டுவரும் இந்தச்சூழலில், இந்தத் தொடர் கள நிலவரங்களை ஆராய்கிறது.*
**கருவுறுதலுக்காக முட்டை தானம் அளிக்கும் பெண்களின் நிலை**
நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையத்தைச் சேர்ந்தவரான 26 வயது தனத்தைப் பொறுத்தவரை பணத்தேவைகளை சமாளிக்க தன் கருமுட்டைகளை விற்பது ஓர் இயல்பான செயலாகிவிட்டது. கடந்த மூன்றாண்டுகளில் பத்து முறை முட்டை தானம் செய்திருக்கிறார், இவரது நண்பரான 33 வயது சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2015இல் இருந்து 2018க்குள் ஏழு முறை தானம் செய்திருக்கிறார்.
மோசமடையும் உடல்நிலை, சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்கள் சீதா கடந்த ஓராண்டாக கருமுட்டை தானம் செய்யவில்லை. அதே போல் கருமுட்டை தானம் செய்யத் தொடங்கும் முன் வாடகைத் தாயாக இருந்த பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த 35 வயது ரம்யா சொல்வது “அடிக்கடி நோய்வாய்ப்படுவதால் கடந்த சில மாதங்களாக கருமுட்டை தானம் செய்யவில்லை.”
பள்ளிப்பாளையமும் குமாரபாளையமும் தமிழ்நாட்டின் முக்கியமான விசைத்தறி மையங்கள், இவை ஒரு பொருளாதார நெருக்கடிச் சூழலில் சிக்கியிருக்கின்றன. நிறைய வேலை இழப்புகளால், பணியாட்களில் சமபகுதியினரான பெண்கள் பலரும் வேலை இன்றி தவிக்கின்றனர். அவர்களில் பலரும் கருமுட்டை விற்பனையை நோக்கித் திரும்பியிருக்கின்றனர்.
அடிக்கடி கருமுட்டை தானம் செய்வதைப் பல பெண்கள் பணம் சம்பாதிக்கும் வழியாக, தங்கள் வழக்கமான வருமானத்துக்கு ஈடாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. **ஒரு தானத்துக்கு 15,000 முதல் 25,000 ரூபாய் வரையான இந்தப் பணம், ஓரிரு மாதங்களுக்கு அவர்கள் குடும்பத்தை நடத்தவோ, கடனில் பகுதியை திருப்பி அடைக்கவோ உதவிசெய்யும் என்பதால், தங்கள் உடல்நலனை கவனிக்காமல் இதை செய்கிறார்கள்.**
**தாங்க முடியாத பின்விளைவுகள்**
நான் நேர்கண்ட எல்லா தானமளிப்பவர்களுமே அடிக்கடி ஜுரம் வருவது, ரத்த சோகை, எடை இழப்பு, மயக்கம், அதிக ரத்தப் போக்கு இவற்றுடன், மாதவிடாயின்போது அதீத இடுப்பு வலி போன்றவை இருப்பதாகக் கூறினார்கள்.
“…அந்த மூணு நாள்ல (மாதவிடாய்) எவ்வளவு வலிக்கும், ரத்தம் போகும் அப்டின்றத வார்த்தையில சொல்ல முடியாது. சில நேரம் அஞ்சு நாள் வரைகூட நீளும். கருமுட்டை தானம் செய்யும்போது போடுற ஊசி வலிக்கும்னா, இந்த பின்விளைவுகள் தாங்க முடியாது” என்கிறார் தனம்.
மருத்துவர் பரீட்ஷித் டாங்க் சொல்வதன்படி, ஊசைட் (கருமுட்டை) எடுப்பதற்காக மீண்டும் மீண்டும் கருப்பையைத் தூண்டுவதால் “கருப்பையில் மோசமான, புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.”
“எங்கள் மருத்துவமனையில் ஒரு தானமளிப்பவர் தன் வாழ்நாளில் மூன்று முறைக்கு மேல் தானமளிக்க முடியாது என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறோம். எங்கள் மருத்துவமனைக்கு வரும் தானமளிப்பவர்கள் விவரங்களை எங்களால் சரிபார்க்க முடியும் என்றாலும், மையப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் இதற்கென இல்லை. எனவே ஒரு பெண் எத்தனை முறை தானமளிக்கிறார் என்று கணக்கெடுக்க முடியாது” என்கிறார்.
இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப (ஒழுங்குபடுத்தும்) மசோதா நீண்டகாலமாக காத்திருப்பில் இருந்து, பிப்ரவரி மாதம் மத்திய கேபினட்டால் அங்கீகரிக்கப்பட்டது. அதன்படி ஒரு ஊசைட் தானமளிப்பவர் வாழ்வில் ஒருமுறைதான் ஊசைட் தானமளிக்க முடியும், அப்போது ஏழு ஊசைட்டுகளுக்கு மேல் அவரிடமிருந்து எடுக்கக் கூடாது.
**ஒழுங்குமுறைக்கான தேசியப் பதிவேடு**
தானமளிப்பவர்கள் கூறுவது என்னவென்றால், ஆரம்ப நிலை பரிசோதனைகளுக்குப் பின் அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு ஹார்மோன் ஊசிகள் கொடுக்கப்படும். கருமுட்டை எடுக்கப்பட்டதன் ஒரு சோதனை நடத்தப்படும். “புதிய தானமளிப்போர்” இந்த நடைமுறை முழுக்க மருத்துவமனையில் தங்கவைக்கப்படுவர். “அனுபவமுள்ள தானமளிப்போர்” சுயமாக பயன்படுத்திக் கொள்ள ஊசிகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்படுவர், அவர்கள் குறிப்பிட்ட காலம் கடந்ததும் திரும்பி வந்து நடைமுறையை முடிப்பார்கள்.
பிற மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது, ஏஜெண்ட்டுகள் இந்தப் பெண்களைக் குழுவாக அழைத்துச் செல்வார். அப்போது பயண, சாப்பாடு செலவுகள் தானமளிப்பவருடைய பொறுப்பு.
**”எங்களுக்கு இவ்வளவு என்று குறிப்பிட்ட தொகை எதுவும் கிடைக்காது; எல்லாம் எங்கள் கருமுட்டை உருவாவது, எந்த மருத்துவமனை, எந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பொறுத்துதான். ரூபாய் 15,000 முதல் 25,000 வரை எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்”** என்று சொல்லும் தனம் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, கேரளம், கர்நாடகம் மருத்துவமனைகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
**“பணத்தில் ஒரு பகுதி ஏஜெண்ட்டுகள் கமிஷனாகப் பிடித்துக்கொள்வார்கள்”** என்கிறார்.
இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதாவில் ஒழுங்குமுறை, மேற்பார்வையிடல், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தலுக்கான ஒரு தேசியப் பதிவேடு இருக்கிறது என்றாலும் அதன் பயன்பாடு குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். காரணம் இனப்பெருக்க சேவைகள் சந்தையானது இந்தியாவில் அளவுக்கு மீறி வளர்ந்திருக்கிறது, அதன் மதிப்பு ஏறக்குறைய அரை பில்லியன் டாலர்கள் இருக்குமென கணக்கிடப்படுகிறது.
“இந்த (தேசியப் பதிவேட்டின்) அமல்படுத்தல் எப்போதென நிர்ணயிக்கப்படாவிட்டாலும், விந்து மற்றும் முட்டை தானம் போன்ற செயல்பாடுகள் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்படாதென நம்புகிறேன். ஏனெனில் அவை உறுப்பு தானம் போன்றவை கிடையாது. முழு இண்டஸ்ட்ரிக்கும் கட்டுப்பாடுகள் வேண்டும்தான். ஆனால், இந்த சேவைகள் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் அளவு இருந்தால் போதும்” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த மூத்த கைனகாலஜிஸ்ட்டும், ஐவிஎஃப் வல்லுநருமான மருத்துவர் ரீட்டா பக்ஷி.
குமாரபாளையத்தில் தனத்துக்கு இந்த ஒழுங்குமுறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் அடிக்கடி கருமுட்டை தானம் செய்வதும் அது அவரது உடல்நலத்தில் ஏற்படுத்தும் தாக்கமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது, சிலசமயம் மருத்துவர்களும் செவிலியர்களும் கூட தொடர்ந்து கருமுட்டை தானம் செய்வதன் பாதகங்கள் குறித்து எச்சரிப்பார்கள் என்று சொல்கிறார்.
“ஆனால், என்ன செய்யுறது. என் பிள்ளைங்களுக்குச் சோறு போடணுமே.”
**பெயர்கள் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மாற்றப்பட்டுள்ளன.**
**நாளை காலை தொடரும்**
**கட்டுரையாளர் குறிப்பு**
தற்சார்புள்ள இதழியலாளரான தரணி தங்கவேலு, பொதுச் சுகாதாரம் சார்ந்த புலனாய்வு இதழியலுக்கான தாக்கூர் அறக்கட்டளையின் நல்கையினை 2019-ல் பெற்றவர். இந்தச் செய்திக்கட்டுரை தாக்கூர் அறக்கட்டளையின் நிதியுதவியோடு எழுதப்பட்டது.
**தமிழில்: தி.ஆர்த்தி**
[பகுதி 1](https://www.minnambalam.com/public/2020/08/18/8/surrogacy-mothers-india-why-what-the-act-says)
[பகுதி 2](https://www.minnambalam.com/public/2020/08/19/12/surrogacy-regulation-bill-and-surrogacy-business-india)
[பகுதி 3]( https://www.minnambalam.com/public/2020/08/20/6/poor-women-tamilnadu-sell-their-eggs)
[பகுதி 4](https://www.minnambalam.com/politics/2020/08/21/37/bavani-river-pollution-and-textile-policy-kidney-women-eggs-%20sales)�,”