கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ளனர். மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற அவர்கள் கொரோனா எதிரொலி காரணமாக நாடு திரும்ப முடியாமலும், தொழிலில் ஈடுபட முடியாமலும் ஈரான் நாட்டில் கீஸ், சாரக், லாவன், புஷர், கங்கோன் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளனர்.
ஈரானில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கிருக்கும் தமிழக மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தொழிலுக்குச் செல்ல முடியவில்லை என்பதால் உணவு, மருத்துவம் என அடிப்படை வசதிகள் கூடப் பெற முடியாமல் தவித்து வருவதாக அவர்கள் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகின்றனர்,
அவர்களை மீட்க வேண்டும் என்று கூறி கன்னியாகுமரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில், தமிழ்நாடு மீனவ கூட்டுறவு தலைவர் சேவியர் மனோகரன் மற்றும் அ.தி.மு.க எம்பிக்கள் உள்ளிட்டோர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று டெல்லியில் சந்தித்து ஈரானில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். அவர்களிடம் ஈரானில் உள்ள மீனவர்களுக்குத் தேவையான உணவு , மருத்துவ வசதி, குறை தீர்க்கும் அலுவலகம் ஆகிய வசதிகளைச் செய்து தருவதாகவும், அவர்களை இங்கு விரைவில் அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் உறுதியளித்தார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
அதுபோன்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ஈரானில் கொரோனா பரவிவரும் சூழலில் அங்குச் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் நிலை என்ன? அவர்களை இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு இன்று (மார்ச் 12) மக்களவையில் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானின் பல்வேறு மாகாணங்களில் 6000 பேர் இருக்கின்றனர். அவர்களில் 1100 பேர் மகாராஷ்டிரா, லடாக் மற்றும் காஷ்மீரிலிருந்து சென்ற யாத்ரிகர்கள். காஷ்மீரைச் சேர்ந்த 300 மாணவர்களும் உள்ளனர். கேரளா, தமிழ்நாடு. குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மீனவர்களும் உள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வருவதில் சில நெறிமுறைகள் பின்பற்றப்படும். அவர்கள் கொரோனா பாதிக்காத பகுதியில் இருக்கின்றனர்.
கடந்த வாரம் 6 பேர் கொண்ட மருத்துவக் குழு, கொரோனா சோதனை ஆய்வகம் அமைக்க ஈரான் சென்றது. கொரோனா சோதனைக்குப் பிறகு 58 பேர் ஈரானிலிருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட இந்தியர்களின் ரத்த மாதிரிகளில் இதுவரை 299 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள மற்ற இந்தியர்களை இந்தியா அழைத்து வர விமானம் அனுப்புவதற்காக அனுமதி கேட்டு அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்” என்றார்.
**கவிபிரியா**
�,”