தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இ-பாஸ் பெறுவதற்கு மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே, இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது எளிமையாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்தச் சூழலில், தமிழகத்தில் இ-பாஸ் முறை தொடரும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) மறைமலை நகரில் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர்,
“பொதுமக்கள் மத்தியில் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றில் குறைபாடு இருக்கும் காரணத்தினால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீடுகளுக்கே சென்று அரசால் வழங்கப்படும் மாஸ்க் கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
மேலும், “கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த நபர்களைத் தீவிரமாகக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மாநில அளவில் சிறப்புக் குழுக்களை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது, இ-பாஸ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்த அவர், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
**-கவிபிரியா**�,