9மறக்காம வந்துருங்க….!

Published On:

| By Balaji

நூறு சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்தவும், வாக்காளர்களை கவரும் வகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களை வரவேற்று அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மார்ச் 27ஆம் தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்புள்ள இந்த சூழலிலும், வாக்குப் பதிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நடைபெற்று வரும் நிலையில், திருச்சி, வேலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் திருமண அழைப்பிதழ் போன்று அழைப்பிதழ் வெளியிட்டு வாக்காளர்களை வரவேற்றுள்ள சம்பவம் பலரை கவர்ந்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில், “அன்புடையீர் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி 24ஆம் தேதி 6-4 -2021 செவ்வாய்க்கிழமை சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் “இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்”

தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து, தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கிறோம்..! வாருங்கள் வாக்களிப்போம்! ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share