ஸ்ரீராம் சர்மா
அது குருக்ஷேத்ரக் களம். பகவத் கீதை அருளப்படுவதற்கு முந்திய கணம்…
மருண்டு மயங்கிய நிலையில் இருந்த பார்த்தனைப் பார்த்துக் கண்ணன் சொன்னான்.
“அர்ச்சுனா… நீ இப்போது எதிர்காலத்தைக் கட்டமைக்கும் முக்கியக் கட்டத்தில் நிற்கிறாய். களத்தில் உனக்கான சூழல்களை உண்டாக்கிக் கொடுப்பது என் பொறுப்பு. களத்தை வென்றெடுத்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு…”
ஒரு பல்கலைக்கழகத்தின் அணுகுமுறைகூட இப்படித்தான் இருக்க முடியும். இருக்க வேண்டும்.
மாணவர்களைத் தன்னெழுச்சியாகச் சிந்திக்கவிட்டு, அவர்களுக்குள் ஞான கனலை உண்டாக்கிப் பின், அதை வடிய விட்டு, எஞ்சி நிற்கும் தெள்ளிய கருத்துகளைக் கல்வியாகக் கொள்ளவைப்பதே பல்கலைக்கழகத்தின் ஆகச் சிறந்த பணியாக இருக்க முடியும்.
கல்வியைத் தன்னுள்ளிருந்தே ஒருவன் கற்றுக் கொள்வானேயானால் பிறகு அவனுக்கு அதில் சந்தேகமே எழாது. மேலும், தன்னம்பிக்கை மிகுந்து வர அடுத்த கட்டத்துக்கு எளிதாக சென்றுவிட வழிவகுத்துவிடும்.
கல்வியை இவ்வாறு ஆழங்காற்பட்டதாகப் பயிற்றுவிக்க வேண்டுமென்றால் “ஆசிரியத்தை” தன் பிறவிக் கடனாக எண்ணும் ஆசான்கள் அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஆசான்கள் அமைவது அபூர்வம். அந்த அபூர்வத்தில் ஒருவர் டாக்டர் கோபாலன் இரவீந்திரன் அவர்கள் என்பது எனது துணிபு.
ஜப்பான் – மலேசியா போன்ற நாடுகளில் பேராசிரியராகப் பணிபுரிந்து, தாய்நாடு திரும்பி சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைத் தலைவராக அடித்தள மக்களிடம் கல்வி சார் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் டாக்டர் ஜி.ஆர்.
கல்வி – கேள்விகளில் உலகார்ந்த கல்வியாளர்களிடம் ஜி.ஆர் அவர்களுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. இவரிடம் நான் கற்றுக்கொண்டது அதிகம். இவர் எனக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்தது கல்வியைக் கடந்த மானுடம்.
மெல்லலை பரப்பி அமைதியாகக் கிடக்கும் ஏரியில் ஏதோ ஒன்று வந்து விழுந்து புரண்டதைப் போல் அந்த துண்டறிக்கை வெளியிடப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில், இதழியல் துறைப் பேராசான் டாக்டர் கோபாலன் இரவீந்திரன் அவர்களுக்கு எதிராக மாணவர்கள் கலகம்…
இந்தச் செய்தி என்னை வந்து அடைந்தபோது முதலில் சிரிப்புத்தான் வந்தது. அவரால் வாழ்ந்தவர்கள்தானே இங்குண்டு. எத்தனையோ பேரைக் கை தூக்கிவிட்டராயிற்றே! இது என்ன தடாலடிப் புதுக்கதை?
பல சமயங்களில் அவரோடு இணைந்து பயணித்திருக்கிறேன். அதிர்ந்து பேசத் தெரியாதவர் என்றாலும், மாணவர்களின் நலனுக்காகவும், கல்வியின் மேன்மைக்காகவும் எவரையும் பகைக்கவும் அஞ்சாதவர் என்பதை அறிவேன்.
அதன் காரணம் பற்றியே அவரைச் சுற்றிச் சில நோஞ்சான் சிலந்திகள் எச்சிலூற வலை பின்னக் காத்திருப்பதையும் அறிவேன். அதனால்தான் எனக்கு முதலில் சிரிப்பு வந்தது.
இது கன்றுக்குட்டிகளின் அபயக் குரலாகத் தெரியவில்லையே, பகாசுரர்களின் அபாயக் குரலாக அல்லவா உறுத்துகிறது என்ற எண்ணம் உடனடியாகத் தோன்றிவிட்டது.
அதை மெய்யாக்கி நின்றது, அந்தத் துண்டறிக்கை!
அசையும் செடிகளுக்குப் பின் கயமை சுமந்தலையும் ஒளியிழந்த கண்களைப் பிரதிபலித்தன அதில் காணப்பட்ட பழுதேறிய வாசகங்கள்!
ஒரு சில மாணவர்களின் பெயரால் வெளியிடப்பட்ட அந்தத் துண்டறிக்கையில், ஆசிரியரை நோக்கிக் கூக்குரலெழுப்பும் ஒரு மாணவனின் பிசிர் குரல் காணக் கிடைக்கவில்லை.
மாறாக, தாழ்வு மனப்பான்மையோடு உண்மையை விழுங்க அலையும் ஆங்காரப் பசி ஏப்பத்தின் செவியறுக்கும் பிளிறலாகவே நாராசித்தது.
அந்த அபாண்ட துண்டறிக்கை வாசகங்களுக்கு இடையிடையே தனிமனித மனமாச்சரியப் பேரழுக்குப் பிசுபிசுத்துக்கொண்டிருப்பதை வெகு இலகுவாகவே உணர்ந்துவிட முடிந்தது.
அது, ஏரோது காலத்துப் புராதான அழுக்கு. கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகர ஞானியை நச்சுக் கோப்பை ஏந்த வைத்த யுகாந்திர அழுக்கு. அதர்மத்தின் திசை காட்டும் பொய் கிழக்கு.
ஒன்று நிச்சயம். இது, மூடிய சமூகமான கி.மு.400 அல்ல. அறிவுசார் மீடியாக்கள் சூழ்ந்த கி.பி.2018. உரித்தெடுக்கப்பட்டுவிடும்.
பசப்பும் மொழிகளோடு கூடிய அந்த துண்டறிக்கை, வெறுப்பைக் கக்கும் இருளறை ஒன்றில் பழைய கோபங்களோடு புனையப்பட்டது என்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது.
இதுகாறும், நூற்றுக்கணக்காண மாணவர்கள் தேறிச் சென்ற இந்தத் துறையில் இப்போது மூன்றே மூன்று மாணவர்களுக்கு மட்டும் குறை வந்துவிட்டது என்றால் அதை மனநலம் கெட்டவர்களால்கூட நம்ப முடியாது.
விவரமில்லாத சிலரால் அந்த மாணவத் தம்பிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்களோ என்றே அஞ்சத் தோன்றுகிறது. அந்தத் தம்பிகள் அதை விரைந்து உணர வேண்டியது அவசியம்.
நாம் பல்கலைக்கழகத்துக்குள் வருவது பயில மட்டும்தான் என்பதை அவர்கள் உணர்ந்துவிடுவது அவர்களுக்கு நன்மை பயக்கும். ஊழல் மயமான பாழரசியலில் மாணவர்கள் சிக்கிக்கொண்டுவிடக் கூடாது என்பதே எனது அக்கறை.
சுருங்கச் சொல்வேன்…
இதழியல் துறை என்பது நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்த காலம் ஒன்று இருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த அந்த நிலையை மாற்றித் தனது இதழியல் துறையைத் தமிழ்மயமாக்கியவர் டாக்டர் கோபாலன் இரவீந்திரன். அதற்கு நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஏலகிரி மலைக் கிராமத்துக்கும், சத்யா நகர் சேரிப் பகுதிக்கும் இன்று இதழியல் உயர்கல்வி சென்று சேர்ந்திருக்கிறது என்றால், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இதழியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பு சாத்தியப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் ஜி.ஆர் அவர்களின் கல்வியோடு கூடிய சமூகம் சார்ந்த முன்னெடுப்பே.
கல்வியின் அதிகபட்சபலன் சமூக நீதியே என்னும் கொள்கை உடையவர் அவர். அடித்தட்டு மக்களுக்கும் உயர்தட்டு மக்களுக்கும் இருக்கும் மன, குண இடைவெளியைத் தன் கல்வி சார் போதனைகள் வாயிலாக மெல்ல, மெல்லக் குறைத்துக்கொண்டே வந்து, முடிவில் மானுட மயமாக்கிவிடுபவர் டாக்டர் ஜி.ஆர்.
அத்தனை பேரும் இன்றும் அவர்பால் நன்றி பாராட்டிக்கொண்டிருக்க, அவர் வகுப்புக்கு வந்து பாடமெடுப்பதில்லை என்று மாணவர்களின் போர்வையில் சிலர் துண்டறிக்கை விட்டிருக்கிறார்கள். கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்துக்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாத அவர்களை எண்ணி பரிதாபப்படத்தான் தோன்றுகிறது.
டாக்டர் கோபாலன் இரவீந்திரன் அவர்களோடு நெருங்கிப் பழகியவன் என்னும் முறையில் அவரது கல்விப் பார்வை குறித்த பரிச்சயம் எனக்குண்டு.
பாடம் என்பது நான்கு சுவர்களுக்குள் கிடைப்பது மட்டுமல்ல. மக்களை நோக்கிச் செல்லுங்கள். நாளை நீங்கள் எழுதப் போகும் எழுத்து இந்த சமூகத்துக்கு ஒரு விடிவைத் தர வேண்டும் என்றால் அந்த எழுத்தும் அதற்கான சிந்தனையும் மக்களிடமிருந்தே உங்களுக்குக் கிடைத்தாக வேண்டும்.
அதை நெறிப்படுத்தி உங்களுக்குள் கல்வி மூட்டுவதே என் பணி என்று அறிவுறுத்துவார். மேலும், மேல்தட்டு காபி ஷாப்புகளில் சென்று உக்கார்ந்துகொண்டு சமூகத்தைத் தேடாதீர்கள் என்பார்.
ஒடுக்கப்பட்ட மக்கள், வாழ்வு புறக்கணிக்கப்பட்ட மக்கள் என சேரிகளுக்கும் மலைக் கிராமங்களுக்குமாக சென்று அவர்களோடு இருந்து சமூகம் பயிலுங்கள் என்றும் வேண்டிக்கொள்வார். சமயங்களில், தானே முன்னின்று அவர்களோடே பயணப்படுவார்.
தனக்கே உண்டான தனி வழியில் தன் மாணவர்களைப் பயிற்றுவிக்கிறார். அவர் ஒரு வித்தியாசமான ஆசான். அப்படி அவர் இருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதுதான் பல்கலைக்கழகம். அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
அறை பாடங்களோடு, களப் பாடங்களையும் கலப்பார். அதை மேலை நாடுகளில் Blended Learning என்பார்கள். “மாடு வந்ததா… பால் கறந்ததா…” என்று ஆசிரியர் தொழிலிலும்கூட மாரடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை.
டாக்டர் ஜி.ஆர் மீது களங்கம் சுமத்த அலைபவர்கள், ஒரு நாளைக்கு சராசரியாக 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரம் வரை உழைக்கக்கூடியவர் டாக்டர் ஜி.ஆர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அவரைப் போல உழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உலகின் பல்வேறு சிந்தனையாளர்களோடு இணையவழி உரையாடல்களில் தன்னை “அப்டேட்” செய்துகொண்டு அதை தன் மாணவர்களுக்குக் கடத்துவதில் பெருவிருப்பம் கொண்டவர்.
உலக நாடுகளில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் என்பதால் தனது உலகளாவிய சிந்தனையாள நண்பர்கள் இந்தியா வரும்போது தன் துறை மாணவர்களுக்காகச் சிறிது நேரம் ஒதுக்கி உரையாட வருமாறு அழைப்பு விடுப்பார்.
அதன்மூலம், தன் மாணவர்களின் சிந்தனைத் தளத்தை மேலும் விரிவாக்கிக் கொடுப்பார். சட்ட திட்டம், சம்பளம் கடந்து தன்னக்கறையால் தன்னெழுச்சியாக அவர் செய்யும் மாபெரும் பணி இது. இது போலொரு துறைத் தலைவர் அமைவது அரிதிலும் அரிது.
ஒரு பேராசிரியர் இத்தனை நேரம் பாடம் எடுக்க வேண்டும் என்ற விதியிருந்தாலும், அவர் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும், கேம்பஸ் டைரக்டராகவும், சிண்டிகேட் மெம்பராகவும் பல பொறுப்புகளில் இருப்பதால் அவருக்கு அதில் விதிவிலக்கு உண்டு. ஆனாலும், அவர் குறை வைத்ததே இல்லை என்று அவரது முன்னாள் மாணவர்களிடம் பேசியதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், அதை பற்றியெல்லாம் துண்டறிக்கைக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கக் காத்திருப்பவரை ஒரு மணி நேரம் பாடமெடுக்க மறுக்கிறார் என்பது காழ்ப்புச் சிந்தனையே அன்றி வேறில்லை.
சமீபத்தில் இவர் நடத்திய சர்வதேச கருத்தரங்கம் ஒன்றுக்கு 40 நாடுகளைச் சேர்ந்த “பேரறிஞர்கள்” தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்து வந்து கலந்துகொள்கிறார்கள் என்றால் உலகளாவிய கல்வியுலகில் டாக்டர் ஜி.ஆர். அவர்களின் அழைப்புக்கு இருக்கும் நன்மதிப்பை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
அடர்த்தியான சிந்தனைகளோடு, அனைவரிடமும் மென்மையாகப் பழகக்கூடியவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் “முற்றம்” என்னுமோர் அமைப்பைத் தொடங்கினார். அதில் பறை இசையை முன்வைத்தார். பலர் விருப்பப்பட்டு அதில் இணைந்து இசை கற்றார்கள்.
இசை என்பது வலுவான ஊடகம். இந்தச் சமூகத்துக்கான செய்தியை இசை வழியாகவும் கடத்தலாம். அந்த இசை, இந்த மண் சார்ந்த இசையாக இருப்பது அவசியம் என்றார்.
உண்மையில் பறை என்பது தவில் என்னும் மங்கல மேளத்துக்கு ஈடானது. கிராமங்களில் அம்மன் புறப்பாட்டுக்குப் பறை இசைப்பதுதான் வழக்கம். வள்ளுவப் பேராசான் கூட “நல்ல படா அபறை” என்றுதான் சொன்னார்.
“அனிச்சப் பூ கால்களையாள் பெய்தாள் ; நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை” என்பார். ஆம், “பறை” என்பது மங்கல வாத்தியம். “அ பறை” என்பதுதான் அமங்கல வாத்தியம்.
நம் மண் சார்ந்த அந்த மங்கல வாத்தியம் இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் முழங்குகிறது என்றால் அதற்குக் காரணமானவர் டாக்டர் ஜி.ஆர்.
மேலும், ஜப்பானில் உள்ள “மாரிக்கோமி எத்னோ ம்யூஸிக்காலஜி” என்னும் ஓப்பன் ஹேர் மியூஸியத்தில் உலகளாவிய இசை வாத்தியங்களுக்கு இடையே நமது பறை இசை வாத்தியத்தையும் கொண்டு சென்று காட்சிக்கு வைக்கச் செய்தவர் டாக்டர் ஜி.ஆர்.
இதற்கெல்லாம், ஒரு தன் முனைப்பு வேண்டும். வாங்கும் சம்பளத்தைக் கடந்து உழைக்கும் மனப்பாங்கு வேண்டும்.
எல்லோரும் மாலை 5 மணிக்கே கூடடைந்து, பெண்டு பிள்ளைகளோடு சுகமாயிருக்கையில் நாம் மட்டும் ஏன் இரவு 8 மணி – 9 மணி என்று துறையில் அமர்ந்துகொண்டு உழைக்க வேண்டும் என்னும் சுயநல ஆயாசம் தோன்றாமல் இருக்க வேண்டும்.
அதற்குக் கல்வியை காதலிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறை வேண்டும். வருங்காலச் சமூகம் வளமாக உயர்ந்து நிற்க வேண்டும் என்னும் சான்றோருக்கே உண்டான அறிவுக் கவலை இருந்தாக வேண்டும்.
ஆசிரியர்கள் என்போரெல்லாம் ஆசான்களாகிவிட முடியாது.
பல்கலைக்கழகத்துக்கு வழி மறந்துபோன ஆசிரியர்கள் எல்லாம் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் காலமிது. துறைத் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் கடற்கரைக் காற்றுக்கு எதிர்க் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நமது கவலை எல்லாம் மாணவர்கள் குறித்தே. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, கல்லூரிக் கல்வி கடந்து பல்கலைக்கழகத்துக்குள் புகும் மாணவர்கள் அதற்கேற்றாற்போல் தங்களைக் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
புரியவில்லையென்றால் ஆசானிடம் சென்று வணங்கிக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களை ஆளாக்கிவிட்டவர் உங்களுக்கு மட்டும் முகம் திருப்பிக்கொள்ளப் போகிறாரா என்ன ?
முட்ட முட்டத்தான் பசு கன்றுக்குப் பால் கொடுக்கும். ஆனால், கன்றாகப்பட்டது தாயின் மடியை இதழதுக்கித்தான் முட்டும். இளங்கொம்பைக் கொண்டு மடியை முட்டுவது கன்றாக இருக்க முடியாது.
மீண்டும் மீண்டும் சொல்வேன். டாக்டர் கோபாலன் இரவீந்திரன் அவர்களைப் போலவோர் கனிந்த ஆசான் அமைவது அரிது. அவரை முன்னுதாரணமாகக் கொள்வது இந்த சமூகத்துக்கு நல்லது.
எட்டுக்கு எட்டு வீட்டில், ஈச்சம்பாயில் படுத்துறங்கி இந்த உலகுக்குக் ஞான ஒளியைக் காட்டிச்சென்ற பேராசான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாணவர்களுக்கு 12 கட்டளைகளை விட்டுச் சென்றிருக்கிறார்.
அதில் ஐந்தாம் கட்டளை,
“ஆசிரியர் தண்டித்தால், அது நமது நன்மைக்காகத்தான் என்று விளங்கி, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்…”
ஏழாம் கட்டளையாக இப்படி அறிவுறுத்துகிறார்…
“ஆசிரியர் மனம் புண்படும்படியான எந்தச் செயலையும், எந்தச் சொல்லையும் பயன்படுத்தக் கூடாது…”
நபி (ஸல்) அவர்களின் பன்னிரண்டாம் கட்டளையை ஏற்று இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்
“ஆசிரியர்களுக்காக நாம் துஆ (பிரார்த்தனை) செய்ய வேண்டும்”
*(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.)*