பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
பத்தாம், பதினோராம், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து எந்த தேதியில் எந்த பாடத் தேர்வு நடைபெறும் என்ற விவரம் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டது.
அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டு, அதற்கு வரும் மே 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை பனிரெண்டாம் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இந்தாண்டு முதல் மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதுபோன்று பத்தாம் வகுப்பிலும் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையின்படி திறன் வளர்ப்புக்கான கூடுதல் தொழில்கல்வி பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை, ”பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல் 500 மதிப்பெண்களுக்கே கணக்கீடு செய்யப்படும். பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல. தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில்தான் பத்தாம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் தொழிற்கல்வி அறிவிக்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. மாநிலம் முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பாடத்தைப் பயின்று வருகின்றனர். அவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**