தமிழ்நாட்டில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை சரிசெய்யவும், கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும் இல்லம் தேடி கல்வி திட்டம் முதலில் 12 மாவட்டங்களில் தொடங்கப்படும். இதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தை பெற்றோரிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் கலை குழுவினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று(டிசம்பர் 1) பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதில், “பயிற்சியை நிறைவு செய்த தன்னார்வலர்கள் உடனடியாக மையங்களை தொடங்கி கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மையம் தொடங்கும்போது தன்னார்வலர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
மையங்களுக்கு வரும் குழந்தைகளை இனிப்பு வழங்கி வரவேற்க வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி மையங்களாக செயல்பட உள்ள இடங்களில் 1098, 14417 எண்களை ஒட்டி வைக்க வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி மையங்களாக செயல்படும் இடங்கள் பொதுமக்கள் பார்வையில் இருக்க வேண்டும்.
கற்றல் கற்பித்தல் பணி நடைபெறும்போது பெற்றோர்கள் உடனிருந்து கண்காணிக்கலாம்.
குழந்தைகளிடம் பாலியல் ரீதியில் தவறான செயல்களில் தன்னார்வலர்கள் ஈடுபடாமல் இருப்பதை பள்ளி மேலாண்மைக் குழு கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,