தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள்தான் பாலியல் தொல்லைக்கு அதிகளவில் ஆளாகின்றனர். வகுப்பெடுக்கும் ஆசிரியர், பேருந்தில் பயணிக்கும்போது நடத்துநர் என மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடக்கும் இடங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் வெளியே சொல்ல ஆரம்பித்துவிட்டதால் என்னவோ தெரியவில்லை நாளொன்றுக்கு இரண்டு மூன்று சம்பவங்கள் செய்தித்தாள்களில் வருகின்றன.
இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் பாலியல் புகார் பெட்டி வைக்க வேண்டும். அதுகுறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து அறிவுறுத்த வேண்டும். பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில், “மாணவர் மனசு” என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31ஆம் தேதிக்குள் பள்ளிகளில் அமைக்க வேண்டும். 37,386 பள்ளிகளிலும் “மாணவர் மனசு” பெட்டியில் வரும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகார் பெட்டி அமைத்தல், ஆலோசனைகுழு அமைத்தல் போன்றவற்றிற்காக ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.3.73 கோடி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்டமாக ரூ.3.73 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,