பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்குத் திரும்பாவிட்டால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் எச்சரித்திருந்தனர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மீண்டும் பணிக்குத் திரும்பிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ என சொல்லப்படும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசும், பணி மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு வந்தன.இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் உட்பட 8 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் அரசு அளித்த உத்தரவாதத்தின் பேரில் வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிட்டதாகவும், தற்போது உத்தரவாதத்தையும் மீறி இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப் படுவதாகவும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று (நவம்பர் 8) விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தடை விதித்த நீதிபதி இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.�,