~பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: உச்ச நீதிமன்றம்

Published On:

| By Balaji

பெண்களுக்கு எந்த நிலையிலும் சொத்துகளில் சம உரிமை வழங்கலாம் என்று தீர்ப்பு வந்துள்ள நிலையில், இதற்கு வழிகாட்டியாக இருந்தது திமுக தலைவர் கலைஞர் 1989ஆம் ஆண்டு இயற்றிய சட்டம்தான் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகிறது என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு 2018 பிப்ரவரி 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதுதொடர்பான வழக்கில் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்பதை நேற்று (ஆகஸ்ட் 11) மீண்டும் உறுதி செய்துள்ளது. அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, “ஒருமுறை மகள் என்றால் வாழ்நாள் முழுவதும் அவர் மகள்தான். ஒரு மகன் திருமணம் செய்து கொள்ளும் வரை மகன்தான். தந்தை உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு வழங்க வேண்டும்” என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியைக் காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், “திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இதயபூர்வமாக வரவேற்கிறேன்

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே – 1989ஆம் ஆண்டே கொண்டுவந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை திமுகவின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.சமூகம் – பொருளாதாரம் – குடும்பம் என அனைத்துத் தளங்களிலும் சம உரிமை பெற்றவர்களாகப் பெண்ணினம் தலைநிமிர்ந்து உயர இந்தத் தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “1989இல் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார். இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்டப்பு, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். பெண்கள் சம உரிமை பெற கலைஞர் நிறைவேற்றிய சட்டம் கலங்கரை விளக்கமாகத் திகழ்வது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share