தகவல் தொழில்நுட்பத் துறையில் பெருமளவில் ஆட்குறைப்பு நடந்து வருவதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபத்தில் காக்னிஸண்ட், இன்போசிஸ் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் பெருமளவில் ஆட்குறைப்பு செய்துள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் [இன்போசிஸ் நிறுவனம் மட்டும் 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்தது](https://minnambalam.com/k/2019/11/06/39/Infosys-Fires-Non-Performing-Employees-says-Report). மேலும், பொருளாதார மந்தநிலை, காரணமாக செலவைக் குறைக்கும் வகையில் காக்னிஸண்ட், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 23,000 பேர் அளவுக்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இன்று தகவல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றினார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் புதிதாக 6 லட்சம் வேலை வாய்ப்புகளை தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாக்கியுள்ளோம். அரசு அலுவலகங்களுக்கு மக்கள் வராமல், அரசுத் திட்டங்கள் மக்களை தேடிச் செல்லும் நிலை உருவாகி வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யாமல் இருக்க இந்த மாநாட்டிலேயே விவாதிக்க வேண்டும். ஆட்குறைப்பை தவிர்ப்பது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் விவாதிக்க வேண்டும். என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தமிழகத்தில் முதுலீடு செய்துள்ள மற்றும் முதலீடு செய்ய முன்வரும் தொழில்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக உள்ளன” என்றும் முதல்வர் கூறினார்.
�,