109 கோடி ரூபாய் மதிப்பில் 370 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 26) தொடங்கி வைத்தார்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 555 புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி 500 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டன. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பேருந்துகள் ஏசி, கழிப்பறை வசதிகளுடன் உள்ளன. இதனால் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 26) தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 370 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார். அதன்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகளும், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 104 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 57 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்திற்கு 41 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்துக்கு 27 பேருந்துகளும், திருநெல்வேலி கோட்டத்திற்கு 26 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 20 பேருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.�,