தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 1) அடிக்கல் நாட்டினார். ராமநாதபுரத்தில் அவர் பேசும்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் பற்றியும் பேசினார்.
“இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு. மதச் சார்பின்மையை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது நமது மாநிலம். இங்கு வாழும் அனைத்து சமயத்தினரும் சகோதரர்களாகப் பழகி வருகிறார்கள். இனியும், சிறுபான்மையின மக்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக விளங்கும். இதையே நான் சட்டமன்றத்திலும் தெரிவித்து உள்ளேன்.
ஆனால், சமீப காலங்களில் இதைக் கண்டு பொறுக்காதவர்கள், அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பாகப் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் சந்தேகப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களிடையே பிளவு ஏற்படுத்திட யார் முயன்றாலும், இந்த அரசின் முயற்சிகளாலும், உங்களது ஒத்துழைப்பினாலும், அது முறியடிக்கப்படும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தைப் பின்பற்றி, தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதை நான் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்”என்று எடப்பாடி பேசினார்.�,