கிராமப்புற பகுதிகளில் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு, 100 நாள் வேலைத் திட்டத்திற்குக் கூலித் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். கொரோனா காலத்தில், இந்த திட்டத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில், பொருளாதார சூழ் நிலையை கருத்தில் கொண்டு ஆறு மாதங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையிலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் 2020 முதல் நடப்பு நிதியாண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வரை 7.17 கோடி குடும்பங்கள், அதாவது 10.51 கோடி தனிநபர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பெற்றிருக்கின்றனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஜூனில் 3.89 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்தன. இது 2019 ஜூன் மாதத்தை விட 80 சதவிகிதம் அதிகம். ஜூலை 2020ல், 2.75 கோடியாக இருந்தது. ஜூலை 2019ஐ விட இது 83சதவிகிதம் அதிகமாகும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் இந்த திட்டத்தின் கீழ் வேலை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாக உள்ளது. இது, 2020ல் இதே மாதங்களில் வேலை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கையை விட 62-82 சதவிகிதம் அதிகம்.
2020 நவம்பரில் இந்த எண்ணிக்கை (1.84 கோடி) வீழ்ச்சியடைந்த போதிலும், 2019 நவம்பரில் கையெழுத்திட்டவர்களை விட 47சதவிகிதம் அதிகமாகும். டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021ல் இந்த எண்ணிக்கை மீண்டும் 2.08 கோடியாக (46.8%) உயர்ந்துள்ளது. இது, 2019 டிசம்பரை விட 46.8சதவிகிதம் அதிகம் மற்றும் ஜனவரி 2020 ஐ விட 30.36சதவிகிதம் அதிகம்.
குறிப்பாகத் தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து 100 நாள் வேலைக்குத் தேவை அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இன்றுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழு 100 நாள் வேலைவாய்ப்பை முடித்துள்ளன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**�,