நாட்டிலேயே பொருளாதாரத் திறனில் தமிழகப் பெண்கள் நிலை குறித்து தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
‘நாட்டில் பொருளாதார ரீதியாகப் பெண்கள் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனரா?’ என்பது தொடர்பான 2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதில் பெண்களின் பொருளாதாரத் திறனில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 92 சதவிகிதப் பெண்கள் சுயமாக வங்கிக் கணக்கை நிர்வகித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புறங்களில் 93 சதவிகிதப் பெண்களும், கிராமப்புறங்களில் 92 சதவிகிதப் பெண்களும் வங்கிக் கணக்கை நிர்வகித்து வருவதாகத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக நான்கில் ஒருவர் மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் நகர்ப்புறங்களில் 32 சதவிகிதப் பெண்களும், கிராமப்புறங்களில் 21 சதவிகிதப் பெண்களும் மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் நுண்கடன் திட்டங்களைப் பயன்படுத்துவது மிகக்குறைவாக இருப்பதாகவும், 74 சதவிகிதப் பெண்கள் மட்டுமே நுண்கடன் திட்டங்கள் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும், அதில் 18 சதவிகிதப் பெண்கள் மட்டுமே கடன் பெற்று பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும், நகர்ப்புறங்களில் 93 சதவிகிதப் பெண்களும், கிராமப்புறங்களில் 96 சதவிகிதப் பெண்களும் வங்கிக் கணக்கை நிர்வகித்து வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 89 சதவிகிதம், கோவாவில் 88 சதவிகிதம், ஒடிசா மற்றும் சண்டிகரில் தலா 87 சதவிகிதம், ஜம்மு காஷ்மீரில் 85 சதவிகிதம், இமாச்சலப் பிரதேசத்தில் 83 சதவிகிதப் பெண்கள் சுயமாக வங்கிக் கணக்கு வைத்துள்ளதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.