தீபாவளி பண்டிகையையொட்டி அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகளை உற்சாகப்படுத்த முடிவெடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை எதிர்கொள்ள அதிமுக பல்வேறு வகையிலும் தயாராகி வருகிறது. [முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில்](https://minnambalam.com/k/2019/10/11/49/edappadi-palaniswamy-compromise-for-admk-block-level-Secretarys) தேர்தல் செலவுகளை சமாளிப்பதற்காக அதிமுகவின் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுக்கு சாலைபோடும் பணி, குடிநீர் தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இதுதொடர்பாக நாம் இன்று காலை வெளியிட்டிருந்த [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2019/10/22/23), “தங்கமணி மூலமாக எடுக்கப்பட்ட சர்வேயில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி ‘விக்கிரவாண்டியில் அதிமுக கூட்டணி 15,000 வாக்குகளுக்கு அதிகமாக பெற்று வெற்றி பெறும். அதேபோல நாங்குநேரியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. உளவுத் துறை ரிப்போர்ட்டிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது. இரண்டு ரிப்போர்ட்களையும் பார்த்த பிறகு முதல்வர் சந்தோஷமாக இருந்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த சந்தோஷத்தோடு விரைவில் தீபாவளி பண்டிகையும் வர இருப்பதால் நிர்வாகிகளை உற்சாகப்படுத்த நினைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்…
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் கிளைச் செயலாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுகவின் கடைமட்ட நிர்வாகிகளின் செலவுக்கென தொகை ஒன்று அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாக செல்லும். தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதே பாணியை கையிலெடுத்துள்ளார்.
அதிமுகவின் கிளைச் செயலாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாக தீபாவளி செலவுக்கென ஒரு தொகை வழங்கப்பட இருக்கிறது. கிளைச் செயலாளர்களுக்கு ரூ.5,000, ஒன்றியச் செயலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் என்ற விதத்தில் வழங்கப்படலாம். அத்துடன் ஒரு வேட்டி, ஒரு புடவை மற்றும் தீபாவளி பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகிறது. இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, வரும் 25ஆம் தேதி இரவுக்குப் பிறகு இதற்கான பணிகள் துவங்கும்” என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
**காவல் துறை ஏமாற்றம்**
இது ஒரு பக்கம் இருக்க அதிமுகவினரை மகிழ்ச்சியடைய வைக்கும் முதல்வர், அவர் துறையிலிருக்கும் தங்களை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார் என ஆதங்கப்படுகின்றனர் காவல் துறையினர். தற்போது, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறைக்கு போனஸ் அறிவிக்கப்படவில்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதும் காவல் துறையினருக்கு போனஸ் கிடையாது.
வழக்கமாக பண்டிகையின்போது ரூ.5,000 முன்பணமாக வழங்கப்பட்டு, அது சம்பளப் பணத்தில் பிடித்தம் செய்யப்பட்டுவிடும். இந்த முறை அந்த ரூ.5,000க்குப் பதிலாக ரூ.10,000 முன்பணம் அளிக்கப்பட இருக்கிறது. மற்ற அரசு ஊழியர்களைப் போலதான் நாங்களும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை விட அதிகமாகவே நாங்கள் பணியாற்றுகிறோம். இது அனைவருக்கும் தெரியும். எனவே, மற்ற ஊழியர்களைப் போல எங்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தங்களது கோரிக்கைக்கு முதல்வர் செவிசாய்ப்பாரா எனவும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
�,