வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான ரூ.1,330 கோடி மதிப்பிலான டெண்டரை ரத்து செய்யக் கோரிய மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை, கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது.
இந்த டெண்டரை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி, தனியார் நிலக்கரி நிறுவனத்தை சேர்ந்த திருமலைச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அன்றைக்கு அந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, டெண்டரை ரத்து செய்ய முடியாது. இதற்கு தமிழக அரசு மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதால், டெண்டர் அறிவிப்பை இந்திய வர்த்தக இதழ்களில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராம்மூர்த்தி அமர்வு முன்பு வந்தது. டெண்டருக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், டெண்டருக்கான கால அவகாசம், ஏற்கனவே 15 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தக இதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்ததோடு, மனுதாரருக்கு வழக்குத் தொடர தகுதியில்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
**வினிதா**
�,