மேகதாட்டு அணை கட்டுவது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் காவிரி நதிநீர் மேலாண்மை குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த ஓராண்டுக்குப் பிறகு இக்குழு நேற்று (பிப்ரவரி 25) கூடி ஆலோசனை நடத்தியது. மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் புதிய தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதுபோன்று புதுச்சேரி, கேரளம் மற்றும் கர்நாடகம் சார்பில் அந்தந்த மாநில அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மேகதாட்டு அணை கட்டுவது குறித்த பேச்சு எழுந்துள்ளது. இதற்குத் தமிழக அதிகாரிகள் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் செயல்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அதை விவாதப் பொருளாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது. மேகதாட்டு அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழகம் சார்பில் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகப் பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் மணிவாசன், “மேகதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் முன்மொழிவைத் தமிழகம் சார்பில் கடுமையாக ஆட்சேபித்தோம். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதை எடுத்துரைத்தோம். இதன்பின் அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது” என்று கூறினார்.
**-கவிபிரியா**�,