டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த விமானத்தில் 5 வயது சிறுவன் தனியாகப் பயணித்து வந்து தனது தாயைச் சந்தித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் மார்ச் 25ஆம் தேதி முதல் சர்வதேச, உள்நாட்டு விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. விரைவில் சர்வதேச விமானச் சேவைகள் தொடங்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. எனினும் பயணிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக பல்வேறு விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லியிலிருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் 5 வயது சிறுவன் தனியாகப் பயணித்து வந்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் விகான் சர்மா, விடுமுறைக்காக டெல்லியில் உள்ள தனது தாத்தா – பாட்டி வீட்டிற்குக் கடந்த பிப்ரவரியில் சென்றுள்ளார். ஊரடங்கு காரணமாக மீண்டும் பெங்களூரு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதும் சிறுவனின் தாத்தா சிறப்புப் பிரிவில் விமானம் மூலம் பெங்களூருவுக்கு விகானை வழியனுப்பி வைத்தார். அதன்படி இன்று மதியம் பெங்களூரு விமான நிலையத்துக்குச் சிறுவன் வந்தடைந்ததை விமான நிலைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டது. விமான நிலையத்தில் சிறுவன் மஞ்சள் நிற ஜாக்கெட், மாஸ்க், கையில் நீல நிற கையுறை ஆகியவற்றுடன் தனது அம்மாவுக்காகக் காத்திருந்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பின்னர் விகானை அவரது தாயார் வந்து அழைத்துச் சென்றார். விகான் டெல்லியிலிருந்து தனியாக வந்ததை அவரது தாயார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்தார்.
**-கவிபிரியா**
�,”