ஹரியானா சுயேட்சை எம்எல்ஏ கோபால் காந்தா ஆதரவில் பாஜக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சிக்கு பலத்த எதிர்ப்பு வலுத்து வருகின்றது.
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 பேர் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளையும் வென்றது. ஜனநாயக ஜனதா கட்சி 10, சுயேட்சைகள் 7, ஹரியானா லோகித் கட்சி 1, இந்திய தேசிய லோக் தளம் 1 இடத்திலும் வென்றுள்ளனர். 46 இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியம் என்ற நிலையில், எந்தவொரு தனிக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், பாஜகவுக்கு சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேர் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இதனால் ஹரியானாவில் பாஜக அரசு விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு ஆதரவளித்த சுயேட்சை எம்எல்ஏக்கள்: கோபால் காந்தா, ரந்தீர் சிங் கோலன், பால்ராஜ் குண்டு, ரஞ்சித் சிங், ராகேஷ் துல்தாபாத், சோம்பிர் சங்வான், தரம் பால் கோண்டர் ஆகியோர் ஆவர். இதனால் விரைவில் பாஜக தலைமையிலான அரசு ஹரியானாவில் பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**கோபால் காந்தாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு**
தேர்தல் வாக்குப்பதிவு நேற்று(அக்டோபர் 24) மாலை அறிவிப்பான பின், இரவிலேயே டெல்லிக்கு ஐந்து எம்.எல்.ஏ.க்களுடன் சென்று, பாஜகவிற்கு தன் ஆதரவை தெரிவித்தார் ஹரியானாவில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் கோபால் காந்தா. இவர் ஒரு காலத்தில் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்தும், காங்கிரஸ் கட்சியில் இருந்து பின்னர் நீக்கப்பட்டு தனிக் கட்சியும் தொடங்கியவர். ஹரியானா நிலவரத்தில் இவரது ஆதரவு தற்போது கடும் சர்சைக்குள்ளாகி வருகிறது.
ஆகஸ்ட் 5, 2012 ஆம் ஆண்டு, கோபால் காந்தாவின் எம்.டி.எல்.ஆர் ஏர்லைன்ஸில்(தற்போது செயல்பாட்டில் இல்லை) ஏர்ஹோஸ்டஸ் ஆக பணியாற்றிய இளம் பெண் ஊழியர் கீதிகா சர்மா என்பவர், டெல்லியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக் குறிப்பில், கோபால் காந்தாவின் பெயரைக் குறிப்பிட்டு அவரது நலனுக்காக என்னை தவறாகப் பயன்படுத்துகிறார்” என்றும் “என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்” என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், காந்தா “என் வாழ்க்கையை நாசமாக்குகிறார்” என்றும் “என் குடும்பத்தை நாசப்படுத்த” முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கீதிகா சர்மா மரணத்திற்குப் பின் அவரது தாயாரும் அடுத்த ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது தற்கொலை கடிதத்திலும் கோபால் காந்தாவின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பாலியல் பலாத்காரம் மற்றும் தற்கொலைக்கு தூண்டிய குற்றம் சுமத்தப்பட்ட இவ்வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கோபால் காந்தா, மார்ச் 2014ஆம் ஆண்டு பெயிலில் வெளியே வந்தார். அதன் பின்னர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு கைவிடப்பட்டது.
இந்நிலையில், சுயேட்சை எம்எல்ஏவான கோபால் காந்தா பாஜகவிற்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில், அவரது ஆதரவை ஏற்கவேண்டாம் என உள்கட்சி, எதிர்கட்சி என எதிர்ப்புகள் கிளம்ப பாஜகவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய திறந்த மடலில், “அமித் ஷா அவர்களே, கோபால் காந்தா போன்ற கிரிமினலுடன் நீங்கள் கைகோர்ப்பது பெண்கள் பாதுகாப்பு குறித்த பாஜகவின் கடப்பாடு குறித்த கேள்விகளையும், அறக் கேள்விகளையும் எழுப்பி வருகிறது. இன்றைய தினத்தில் நாட்டின் பெண்கள், உங்களுக்கு எது முக்கியம்? அதிகாரமா? இல்லை பெண்கள் பாதுகாப்பா என்பதை கவனித்து வருகின்றனர்” என்று தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான உமா பாரதி, பாஜகவின் இம்முடிவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஒரு பெண்ணின் தற்கொலைக்கும், அவரது தாயாரின் தற்கொலைக்கும் காரணமாகி, அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்தான் இந்த காந்தா. இந்த வழக்கு இன்னும் கூட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
நான் நமது கட்சியின் தார்மீக கோட்பாடுகள் குறித்து அறிந்தவள். அதனால் நான் கேட்க விரும்புவது, நரேந்திர மோடி போன்ற மாபெரும் தலைவர்களைக் கொண்ட நமது கட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்குக் காரணம்,மோடி நம்முடன் இருக்கிறார் என்பதால்தான். மோடி என்ற சக்தி மீது எழுப்பப்பட்டது நமது கட்சி. அதற்கு பாதிப்புவந்து விடக் கூடாது. ஹரியானாவில் நமது ஆட்சி அமைய வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் நமது தூய்மையான தொண்டர்களினால் அமைந்ததாக அது இருக்க வேண்டும். அவர்களது உயிர்த் தியாகம் உள்ளிட்டவை மதிக்கப்பட வேண்டும். நாம் மட்டுமல்லாமல் நம்முடன் இருப்பவர்களும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டியது முக்கியம்” என்று கூறியுள்ளார் உமா பாரதி.
உமா பாரதியின் இக்கருத்து பாஜகவிற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.�,”