பாழடைந்த கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம்: புதிய கட்டடம் எப்போது?

public

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல், பழமையான கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. திட்டச்சேரியில் வீடுகள், கடைகள் என நான்காயிரத்துக்கு மேற்பட்ட இருமுனை, மும்முனை மின் இணைப்புகள் உள்ளன. ஆண்டுக்கு லட்சக்கணக்கில் மின்சாரத்துக்கு வருவாய் ஈட்டக்கூடிய பகுதியாக திட்டச்சேரி உள்ளது.
திட்டச்சேரி மின் வாரிய அலுவலகத்தில் இரவு, பகல் என 24 மணி நேரமும் மின் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் அலுவலகம் மின் ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும், மின் உபகரணங்களை பாதுகாக்கும் இடமாகவும் உள்ளது. இந்த நிலையில் அலுவலக கட்டடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் அலுவலக கட்டடம் உள்ளது. மழைக்காலங்களில் நீர் கசிவதால் கணினி உள்ளிட்ட உபகரணங்களை அலுவலகத்தில் வைக்க முடியாத நிலையும் உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்துவதற்கு தனியார் கணினி மையங்களை நாடி செல்ல வேண்டி உள்ளதாகவும், அங்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே பழைய அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

**-ராஜ்-**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *