நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தனது மகனுடன் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் இரண்டு மாத மின்கட்டணமாக ரூ.25,071 செலுத்திய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா எருமாடு அருகே ஆழிஞ்சால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 78 வயது தேவகி. இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.95 முதல் ரூ.260 வரை மின்கட்டணம் வரும். அதை அவர் தவறாமல் செலுத்தி வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் அவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு நீங்கள் ரூ.25,071 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும், அதை உடனே செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தேவகி, இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் சென்று விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை என்றும் உடனே மின்கட்டணத்தைச் செலுத்திவிடுங்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேறு வழியில்லாமல் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று 25,071 ரூபாயைக் கட்டணமாக செலுத்தினார்.
மேலும் உயரதிகாரிகளிடமும் அவர் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து கூடலூர் செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், பந்தலூர் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், மின்கணக்கீட்டாளர் சரியாக வந்து மின்சாரத்தைக் கணக்கீடு செய்வது இல்லை என்று புகார் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மின்கணக்கீட்டாளர் கவனக்குறைவாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தேவகி வீட்டில் மின்சாரம் கணக்கெடுத்து அவருக்கு ரூ.25,071 என்று அனுப்ப காரணமாக இருந்த மின்கணக்கீட்டாளர் ரமேஷை பணியிடை நீக்கம் செய்து உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதுகுறித்து பேசியுள்ள மின்வாரிய அதிகாரிகள், “தேவகி அம்மாள் வீட்டில் பழைய மீட்டருக்கு பதிலாக புதிதாக டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த மீட்டர் பொருத்திய பின்னர் தற்போதுதான் மின்கட்டணம் கணக்கிடப்பட்டது.
அப்போது பழைய மீட்டரில் பதிவாகி இருந்த யூனிட் அனைத்துக்கும் சேர்த்து கட்டணம் கணக்கீடு செய்து அனுப்பப்பட்டுள்ளது. மூதாட்டி செலுத்திய பணம் திரும்ப வழங்கப்பட்டது. எனவே கவனக்குறைவாக நடந்த இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
**-ராஜ்-**
.