சண்டே ஸ்பெஷல்: சளித் தொந்தரவுக்கு எளிய தீர்வுகள்…

Published On:

| By Balaji

குளிர்காலம் வந்தாலே பலருக்கும் சளித் தொந்தரவு படுத்த ஆரம்பிக்கும். கொரோனா காலம் என்பதால் மருத்துவமனை செல்லக்கூட பயமாக இருக்கும் நிலையில் முதியவர்களுக்கு ஏற்படும் சளித் தொந்தரவுக்கு உணவின் மூலம் வீட்டிலேயே பின்பற்றக்கூடிய எளிய வைத்திய முறைகள் இருந்தால் நல்லது என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதோ அதற்கான வழி…

இந்தப் பிரச்சினையை மூன்று விதங்களில் அணுகலாம். சிலருக்கு சாதாரண சளி, இருமல் இருக்கும். நெஞ்சில் சளி கட்டியிருக்கும். அந்தச் சளி வெளியேறினாலே நிம்மதியாக உணர்வார்கள். மிளகு, சீரகம், ஓமம் மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுத்தமான துணியில் கட்டி முடிச்சிட்டு தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். அதை வடிகட்டி, அந்த நீரை நாள் முழுவதும் குடிநீராகப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் சிறிது துளசியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆடாதோடா இலைகள், துளசி இலைகள், தூதுவளை இலைகள், சிறிது திப்பிலி சேர்த்துக் கொதிக்கவைத்த நீரை, கஷாயமாக வாரம் இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருவேளை குடிக்கலாம். திப்பிலியை வெறும் கடாயில் லேசாக வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அதை சிறி தளவு தேனில் குழைத்து தினம் சிறிது சாப்பிடலாம். வீசிங் இல்லை…. நெஞ்சில் உள்ள சளி வெளியேறினால் போதும் என்பவர்கள் இதைச் செய்யலாம்.

இன்னும் சிலருக்கு காய்ச்சல் இருக்காது. ஆனால் கடுமையான மூக்கடைப்பு, சளி இருக்கும். அவர்கள் ஆடாதோடா சூரணம், முசுமுசுக்கை, திப்பிலி போன்ற வற்றை கஷாயமாகச் செய்து குடித்தால், நெஞ்சை அடைத்திருக்கும் சளி வெளியேறிவிடும்.

சிலருக்கு சளி இருக்காது. ஆனால் அடிவயிற்றிலிருந்து இருமல் மட்டும் தொந்தரவு செய்யும். அவர்கள் அதிமதுரம், சித்தரத்தை சேர்த்த கஷாயம் குடிக்கலாம்.

**சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கான பொதுவான ஆலோசனைகள்…**

குளிர்ச்சியான, மந்தத்தை ஏற்படுத்துகிற எந்த உணவையும் சாப்பிடக் கூடாது. சளி என்பது நெஞ்சுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வயிற்றில் மந்தம் உண்டானாலும் சளி வரும். கோவிட் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோருக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் வருவதையும், ஒன்றிரண்டு நாள்களில் காய்ச்சல் போனாலும் சளி மட்டும் நீடிப்பதையும் பார்க்கலாம். அதனால்தான் வயிற்றை கவன மாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இரவு தூங்கும்போது திக்கான பால் குடிப்பது, இரவில் தாமதமாகச் சாப்பிடுவது போன்றவை கூடாது. சளி அதிகமாக இருக்கும்போது செரிமானம் சரியாக இருக்காது. எனவே இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டும். பிறகு துளசி, மஞ்சள்தூள் சேர்த்த வெந்நீரைக் குடிக்கலாம்.

பால் குடித்தே ஆக வேண்டும் என்பவர்கள், மஞ்சள் தூள், மிளகு, திப்பிலித்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். ஆனால், மாலையில் குடிப்பதுதான் சிறந்தது. பால் சேர்க்காத சுக்கு காபி, அதிமதுரம், தேன் கலந்த வெந்நீர் குடிக்கலாம். குளிர்ச்சியான இடங்களில் வாக்கிங் செல்வது, அமர்ந்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

இஞ்சி சேர்த்த டீ, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த துவையல் சாப்பிடலாம். ஓமத்தை வறுத்துப் பொடித்து, சிறிய துணியில் வைத்துக் கட்டி, அவ்வப்போது மூக்கின் அருகில் வைத்து இழுக்கலாம். இது மூக்கடைப்பை சரிசெய்து, சுவாசத்தை சீராக்கும். துளசி இலைச்சாறு அல்லது தும்பை இலைச்சாற்றில் இரண்டு சொட்டு எடுத்து மூக்கினுள் விட்டாலும் மூக்கடைப்பு சரியாகும். மஞ்சளைச் சுட்டு மூக்கின் வழியே புகையை இழுப்பதும்கூட நிவாரணம் தரும்.

**[நேற்றைய ரெசிப்பி: மட்டன் ஆம்லெட் புலாவ்](https://minnambalam.com/public/2022/01/22/1/mutton-omlaet-pulav)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share