வேலூரில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தரப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு வேலூரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டிசம்பர் 23 பிற்பகல் 3.14 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. மூன்றாவது முறையாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு பகுதியில் நேற்று(டிசம்பர் 25) காலை 9.30 மணி அளவில் ஐந்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். நில அதிர்வினால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் வேலூர் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவ்வாறு செல்ல முடியாத மக்கள் அங்கேயே கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் இன்று(டிசம்பர் 26) நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசலை ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், கட்டடம் வலுவானதாக இல்லாததால் நில அதிர்வின்போது 40 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தரப்படும். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதனால் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
**-வினிதா**
�,