‘நான் 16 வயது இளைஞன் அல்ல; 61 வயது இளைஞன்’ என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவை, ‘அது வைர விழா அல்ல; வயதானவர்களின் விழா’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஜூன் 5ஆம் தேதி காயிதே மில்லத்தின் 122ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள். அவருடைய கனவை நாம் நனவாக்க வேண்டும். மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயல்வது போல தமிழை ஆட்சி மொழியாக்க முயற்சி செய்ய வேண்டும்.
மேலும் காவிகள் ஆளலாம் என்று தமிழிசை கூறியிருப்பது அரசியல் நாகரிகமாக உள்ளது. பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவை வயதானவர்கள் விழா என்று கூறியுள்ளார். இது அவருடைய அரசியல் நாகரிகத்தைக் காண்பிக்கிறது. அவருக்கு மட்டுமே என்ன 16 வயதா ஆகிறது? இப்படி கூறியுள்ளதன் மூலம் அவர் மூத்த குடிமக்களை அவமானப்படுத்தியுள்ளார். மாட்டிறைச்சியைத் தடைசெய்து மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு கலாசாரத்தையும், பொருளாதாரத்தையும் சீரழிக்கிறது. இதற்கு எதிராகத்தான் எதிர்க்கட்சிகள் அனைவரும் வைர விழாவின்போது குரல்கொடுத்தோம். மேலும் இது அரசியலுக்கான கூட்டணி அல்ல” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்குப் பதிலளிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை (நேற்று) நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நான் 16 வயது இளைஞன் அல்ல; 61 வயது இளைஞன். வயதை மறைக்க நினைத்திருந்தால் டை அடித்து இருப்பேன். காவிரியில் தமிழகம் உரிமை இழந்ததற்கு கழகங்களின் ஆட்சியே காரணம்” என்று அவர் தெரிவித்தார்.�,