அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தைத் திறக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், அங்கு 500 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், அமெரிக்காவில் தகவல் தொடர்பு, சில்லறை விற்பனை மற்றும் வங்கிப் பிரிவுகளில் அதிகக் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை இன்ஃபோசிஸ் திறக்கிறது. இதன் வாயிலாக 2020ஆம் ஆண்டுக்குள் அப்பகுதியைச் சேர்ந்த 500 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் இன்ஃபோசிஸ் உறுதியளித்துள்ளது. சென்ற ஆண்டில் இதேபோல நான்கு தொழில்நுட்ப மையங்கள் அமெரிக்காவில் அமைக்கப்படும் எனவும், அதன் வாயிலாக 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறியிருந்தது.
2017ஆம் ஆண்டின் மே மாதத்திலிருந்து இதுவரையில் இந்நிறுவனம் அங்கு மொத்தம் 6,200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் அமைக்கப்படும் தொழில்நுட்ப மையத்தின் வாயிலாகவும், அங்கு மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வாயிலாகவும் அமெரிக்க நிறுவனங்களின் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு உறுதுணையாகச் செயல்படுவோம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஹார்ட்ஃபோர்டு, கனெக்டிகட், பீனிக்ஸ், அரிசோனா ஆகிய நகரங்களிலும் தொழில்நுட்ப மையங்களை அமைத்து அங்கு அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் இன்ஃபோசிஸ் உறுதியளித்துள்ளது.�,