வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இதுவரை 17 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் பெய்துவரும் பெருமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக, கேரளாவில் உள்ள 14 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்தும், உணவு மற்றும் உடை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமலும் நிவாரண முகாம்களில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதைத் தீர்க்க, பல்வேறு மாநிலங்கள் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து நிவாரண நிதியும், உணவு மற்றும் மருந்துபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களும் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேற்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கடந்த 10ஆம் தேதி, தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. கடந்த 18ஆம் தேதி மேலும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி, பால் பவுடர், வேட்டி, பெட்ஷீட் அனுப்பப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 306 டன் அரிசி, 230 டன் பால் பவுடர் ஆகியவற்றை தமிழக அரசு சார்பில் அனுப்பிவிட்டோம். ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் 200 ஆக்சிஜன் சிலிண்டர்களும் அனுப்பியுள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 226 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 130 மருத்துவக் குழுக்களைச் சேர்ந்த மருத்துவர்கள் உதவி செய்து வருகின்றனர். கேரளாவுக்கு அதிகபட்ச நிவாரணம் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சத்யகோபால், “கேரளாவிற்கு உணவு பொட்டலங்களை விட பெட்ஷீட், உள்ளாடைகள், செருப்புகள், வேட்டி, சேலைகள் உள்ளிட்டவற்றின் தேவை தான் இப்போது வேண்டும்” என்று தெரிவித்தார்.�,