மலைப் பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைப் படுத்துவது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காகத் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, மாவட்டத்துக்கு இடையேவும், மாநிலங்களுக்கு இடையேவும், மலைப் பகுதிகளுக்குச் செல்லவும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியது. பின்னர் மத்திய அரசு இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் தமிழகத்திலும் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. எனினும் மாநிலங்களுக்கு இடையேவும், கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு போன்ற மலைப் பகுதிகளுக்கு பயணிக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த எழில்நதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இவ்வழக்கு மீண்டும் இன்று (அக்டோபர் 13) தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராம்மூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “தற்போது மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அமலில் இருக்கும் இ-பாஸ் நடைமுறைக்குப் பதிலாக இ-ரிஜிஸ்டர் நடைமுறையைக் கொண்டு வர ஆலோசனை நடந்து வருவதாகவும், எனினும் இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், மலைப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் என்பதால், வெளியிலிருந்து செல்பவர்களால் அப்பகுதி மக்களுக்குப் கொரோனா பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் மலைப் பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைப் படுத்துவது தொடர்பாக மூன்று வாரங்களில் மத்திய அரசிடம் விளக்கம் பெற்று விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**-பிரியா**�,”