ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் இணைந்து நடித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் நாளை (மார்ச் 15) திரைக்குவர உள்ளது. இந்நிலையில் லடாக்கில் நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவத்தை ஷில்பா பகிர்ந்துள்ளார்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மா.கா.பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கௌதம் என்ற கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாணும், தாரா என்ற கதாபாத்திரத்தில் ஷில்பாவும் நடித்துள்ளனர். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் சில காட்சிகள் லடாக்கில் நடைபெற்றுள்ளது. “மணாலி, லடாக் ஆகிய பகுதிகளுக்கு தோழிகளுடன் செல்ல வேண்டும் என விரும்பியிருந்தேன். ஆனால் என் தோழிகள் அதற்கு ஒத்துழைக்காததால் என் கனவு நனவாகாமலே இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூலம் அது நிறைவடைந்தது”என்று கூறினார்.
மேலும் அவர், “மலையேறுவது போன்று சில காட்சிகள் படமாக்கப்பட்டன. யார் முதலில் ஏறுவது என்ற போட்டியுடன் ஏறினோம். சில காட்சிகளை மலை உச்சியில் நின்று படமாக்கினோம். பலமான காற்று வீசியது. அப்போது உதவியாளர்கள் என்னையும், ஹரிஷ் கல்யாண் மற்றும் ஒளிப்பதிவாளர் கவினையும் பிடித்துக்கொண்டனர். இல்லையேல் எங்களது எலும்புகூட கிடைத்திருக்காது. மிகவும் சவாலான, ஆபத்தான, சுவாரஸ்யமான அனுபவமாக அது இருந்தது. தற்போது இப்படம் மிக அழகாக உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
�,