விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது கோவை நீதிமன்றம்.
ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா. இவர், 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதியன்று தனது முகாம் அலுவலகத்தில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்த நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென்று வழக்கு தொடுத்தார் விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவிக்குமார். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை விசாரணை செய்தது சிபிஐ.
இரண்டு ஆண்டுகளாக விசாரணை தொடர்ந்த நிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ. இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்கள் யாரும் இல்லை என்று கூறி, இந்த வழக்கைக் கைவிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து, விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவிக்குமார் ஆட்சேபணை மனு தாக்கல் செய்தார்.
கடந்த 7ஆம் தேதியன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, “உயரதிகாரிகள் விஷ்ணுப்ரியாவுக்கு அழுத்தம் கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்பதால், இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் தொடர்புடைய 7 பேரிடம் விசாரணை நடத்த வேண்டுமென்று ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இந்த வழக்கு, இன்று (டிசம்பர் 13) கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையைத் தள்ளுபடி செய்வதாகவும், மீண்டும் விஷ்ணுப்ரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.
இந்த விசாரணை அறிக்கையை 6 மாத காலத்துக்குள் அளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.�,