நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 25) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் 2,700 இடங்களில் விநாயகர் சிலை வைக்கக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை எனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விநாயகரை ஆதி முதல் வணங்கி வந்தாலும் அவரை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் பாலகங்காதர திலகர் 1893ஆம் ஆண்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி என்ற விழாவை விமர்சையாக கொண்டாட வழிவகுத்தார்.
அவரது விருப்பப்படி முதன்முதலாக பூனாவில் உள்ள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிறப்பாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலை வைக்க வேண்டும். ஒருசில இடங்களில் காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடம் உரிய அனுமதி பெற வேண்டும். குறிப்பாக, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றங்கரையில் கரைக்க அனுமதி வழங்கப்படும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடங்களில் அலங்காரத்துக்காகவும் தேவைக்காகவும் மின்சாரத் திருட்டில் ஈடுபடக் கூடாது.
அனுமதி வழங்கப்படாத இடங்களில் வைக்கப்படும் சிலைகள் அகற்றப்படும். விழாவன்று, புதிதாகச் சிலை வைக்க அனுமதி கேட்டால் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்து மூன்றாம் நாள் தான் சிலையைக் கரைப்பார்கள். சிலைகளைக் கரைக்க சென்னையில் நீலாங்கரை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், காசிமேடு, என்ணூர் ஆகிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்து முன்னணி உள்ளிட்ட பெரிய அமைப்புகள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி வழங்கப்படும். மற்ற அமைப்புகளுக்கு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் கரைக்க அனுமதி வழங்கப்படும்’ எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் திருவிழா காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, பதற்றமான இடங்களில் விநாயகர் சிலைக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.�,