ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 3ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71 ஆக உயர்ந்தது. ஒரு மாதத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு ரூ.2.5 வரையில் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, தேசியத் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.79.15 ஆகவும், டீசல் விலை ரூ.71.15 ஆகவும் உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் பெட்ரோல் விலை (மே 28) ரூ.78.43 ஆக இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அன்றைய தினத்தில் மும்பையில் ஒரு பெட்ரோல் விலை ரூ.86.24 ஆக உயர்ந்திருந்தது. இப்போது அங்கு பெட்ரோல் விலை ரூ.86.56 ஆகவும், டீசல் விலை ரூ.75.54 ஆகவும் இருக்கிறது.
ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் விலை 2 ரூபாயும், டீசல் விலை 2.42 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் அவற்றின் மீது விதிக்கப்படும் வரியைப் பொறுத்து மாறுபடும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். மேற்கூறிய இரண்டு காரணிகளும் சமீப காலமாகவே பாதகமாக இருப்பதால் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.�,