கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 30) உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்ஐவி கிருமி தொற்று பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இதனிடையே, எச்ஐவி தொற்றுடைய ரத்தத்தைத் தானமாக வழங்கிய ராமநாதபுர மாவட்டம், கமுதி அருகே திருசிலுவையாபுரத்தை சேர்ந்த இளைஞர் நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றார். இவர் சிவகாசி பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரது அண்ணி கர்ப்பமாக இருந்தபோது, சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக இவர் ரத்த வங்கிக்குத் தானமாக ரத்தம் கொடுத்துள்ளார். இதற்கிடையே வெளிநாடு செல்வதற்காக அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்தபோதுதான் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தனக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரிந்தவுடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்குத் தனது ரத்தத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று தகவல் தெரிவித்துள்ளார். எனினும் அதற்கு முன்பாகவேதான் சாத்தூர் கர்ப்பிணிக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.
இளைஞர், தாமாக முன்வந்து மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்ததை அனைவரும் பாராட்டிவந்த நிலையில், குற்றவுணர்வு காரணமாக, அவர் சாப்பாட்டில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அவரது உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை 3.30 மணியளவில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.
அந்த இளைஞர் உயிரிழப்புக்கும் எச்ஐவி தொற்றுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் விஷம் சாப்பிட்டதன் காரணமாகவே உயிரிழந்தார் என்று ராஜாஜி மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.�,