தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, மேகதாட்டுவின் அணை கட்டும் பகுதியில் அம்மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த மாதம் அனுமதியளித்தது. இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென நேற்று நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது.
இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாட்டு தமிழகத்திற்கு உதவும் திட்டம்தான் எனவும், இதுதொடர்பாக பேச நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாட்டுவில் ஆய்வு செய்துவருகிறது கர்நாடகா. முன்பே திட்டமிட்டபடி அணை கட்டும் பகுதியில் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் குழுவினர் இன்று (நவம்பர் 7) காலை முதல் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள பொதுப் பணித் துறை, வனத் துறை மற்றும் வல்லுனர் குழுவினர், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
**புதுச்சேரி சட்டமன்ற சிறப்புக் கூட்டம்**
இந்த நிலையில் மேகதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக விவாதிக்க புதுச்சேரியில் வரும் 14ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. அணை கட்டுவதற்கு எதிராக புதுச்சேரியிலும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
**ஆளுநர் டெல்லி பயணம்**
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கும் அவர், மேகதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,