தஞ்சாவூரில் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 31) தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்தார். அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.நடராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இரவு 9 மணியளவில் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் திறந்தவெளி வேனில் முதல்வர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில், திடீரென செருப்பு ஒன்று முதல்வர் வாகனம் மீது வீசப்பட்டது. முதல்வரைக் குறிவைத்தே இந்த செருப்பு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் மீது படாமல், அவருக்குப் பின்புறத்தில் விழுந்துள்ளது. பின்புறத்திலிருந்தே அந்த செருப்பு வீசப்பட்டுள்ளது. யாரால் வீசப்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணிக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். திமுகவின் சகாப்தம் இந்தத் தேர்தலோடு முடிந்துவிடும் என்று கூறிய முதல்வர், “மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும். திறமையான பிரதமர் நாட்டுக்குத் தேவை. திமுகவினர் செய்த தவறுகள் அனைத்தும் ஆதாரத்துடன் உள்ளது. தேர்தல் முடிந்தபிறகு ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவோம்” என்று பேசினார்.�,