”தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, சென்னையில் நாளை நடைபெறவுள்ள உதவி அறுவைசிகிச்சை வல்லுநர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு 1223 உதவி அறுவைசிகிச்சை வல்லுநர்களை தற்காலிக அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு நாளை நடைபெறவிருக்கிறது. ஆனால், இத்தேர்வில் மருத்துவர்கள் பங்கேற்பது சிக்கலாகியிருக்கிறது.
புதிதாக உருவான 1079 காலியிடங்கள், கடந்த காலங்களில் நிரப்பப்படாமலிருந்த 144 பின்னடைவுப் பணியிடங்கள் என மொத்தமுள்ள 1223 பணியிடங்களுக்கு, அதைவிட பல மடங்கு மருத்துவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது. இவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மேற்கொண்டு வரும் போராட்டங்களின் காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் உதவி அறுவைசிகிச்சை வல்லுநர் பணிக்கு விண்ணப்பித்த மருத்துவர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்பார்களா என்பது ஐயமாகியுள்ளது.
நாட்டின் எந்த பகுதியில் வசிப்பவர்களும் மருத்துவர் பணியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததால் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். பிற மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் சொந்த மாநிலத்தில் பணி செய்யும் விருப்பத்துடன் இத்தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர். ஆனால், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களால் போக்குவரத்து நிலைகுலைந்து போயிருக்கிறது. மதுரை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் தொடர்வண்டிகளை சிறை பிடித்ததால் பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து இன்னும் சீரடையவில்லை. தமிழகம் முழுவதும் நேற்று பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்னும் முழு அளவில் பணிக்கு திரும்பவில்லை.
வழக்கமான போட்டித்தேர்வுகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலோ, முக்கிய நகரங்களிலோ நடைபெறும். ஆனால், மருத்துவர் பணிக்கான போட்டித் தேர்வுகள் சென்னையில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இப்போது நிலவும் சூழலில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களோ, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களோ சென்னைக்கு வந்து சேர்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இத்தகைய நிலையில் போட்டித் தேர்வுகளை நாளை நடத்தினால் பலரும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். இது சம்பந்தப்பட்டோரின் வாய்ப்புகளை பறிக்கும் செயலாக அமையும். அத்துடன், தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு திறமையான மருத்துவர்களின் சேவை கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.
எனவே, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, சென்னையில் நாளை நடைபெறவுள்ள உதவி அறுவைசிகிச்சை வல்லுநர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அனைவரும் பங்கேற்க வாய்ப்புள்ள மற்றொரு நாளில் இந்த தேர்வை நடத்த வேண்டும்.�,”