நடப்பு ஆண்டில் பருத்தி விதைப்புக்கான மொத்தப் பரப்பளவில் 45 சதவிகிதம் அளவில் மட்டுமே பருத்தி விதைக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியப் பருத்தி சங்கத் தலைவர் அதுல் கணத்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “சென்ற ஆண்டின் ஜூலை 7ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 123.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருத்தி, நடப்பு ஆண்டில் அதே காலகட்டத்தில் 56.57 லட்சம் ஹெக்டேர் (45 விழுக்காடு) பரப்பளவில் மட்டுமே விதைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் 2.85 லட்சம் ஹெக்டேரிலும், ஹரியானாவில் 6.65 லட்சம் ஹெக்டேரிலும், ராஜஸ்தானில் 5.61 லட்சம் ஹெக்டேரிலும், குஜராத்தில் 4.93 ஹெக்டேரிலும், மகாராஷ்டிராவில் 19.57 லட்சம் ஹெக்டேரிலும், மத்தியப் பிரதேசத்தில் 4.87 லட்சம் ஹெக்டேரிலும், தெலங்கானாவில் 8.80 லட்சம் ஹெக்டேரிலும் பருத்தி விதைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இந்திய பருத்தி சங்கம் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, 2017-18 பருவத்தில் 365 லட்சம் பேல் (ஒரு பேல் என்பது 170 கிலோ மூட்டை) அளவு பருத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், 324 லட்சம் பேல் அளவிலான பருத்தி உள்நாட்டு உபயோகத்திற்கும், 70 லட்சம் பேல் அளவு பருத்தி வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.�,