eபெண்களுக்கு 41 % இடங்களை ஒதுக்கிய மம்தா

Published On:

| By Balaji

பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்காமல் பல வருடங்களாக மசோதா கிடப்பில் உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 41 விழுக்காடு இடங்களை ஒதுக்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி நேற்று (மார்ச் 12) வெளியிட்டார். அதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெண்கள். ஒட்டுமொத்த வேட்பாளர்களில் இது 41 விழுக்காடாகும். 2014ஆம் ஆண்டில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 35 விழுக்காடு இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இம்முறை கூடுதலாக 6 விழுக்காடு இடங்களை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இம்முறை 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் புதுமுகங்கள்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி, “எல்லோரும் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இம்முறை 41 விழுக்காடு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார். இந்த தேர்தல் மிகுந்த சவாலானது என்று கூறிய மம்தா, “அரசியலமைப்பே இப்போது இல்லாமலாகிவிட்டது. மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக தேர்தலை வைத்தாலும், பாஜக சில விஷயங்களைக் கையாள நினைத்தாலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளிலும் வெல்லும்.

தேர்தல் அட்டவணையில் கூட எப்படிப்பட்ட பழிதீர்ப்பு அரசியல் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்கும்போது, 42 தொகுதிகள் இருக்கிற மேற்கு வங்கத்துக்கு மட்டும் ஏன் 7 கட்டங்களாக நடத்த வேண்டும்? நரேந்திர மோடியை வீழ்த்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றை குறிக்கோள். அவர் இந்த நாட்டை அழித்துவிட்டார்” என்றார்.

மேலும், மோடி போட்டியிடுகிற வாரணாசியில், மோடிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாகவும், அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி அழைத்தால் வாரணாசிக்குப் பிரச்சாரத்துக்குச் செல்வேன் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share