eபுதிய உச்சம் தொட்ட ஜிஎஸ்டி கலெக்‌ஷன்!

Published On:

| By Balaji

2018-19ஆம் நிதியாண்டின் இறுதி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் வசூலாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று (ஏப்ரல் 1) வெளியிட்டது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதிலிருந்து இதுவரையில் எட்டாத புதிய உச்சத்தை மார்ச் மாதத்தில் எட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.20,353 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.27,520 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.50,418 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.8,286 கோடி செஸ் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் ரூ.97,247 கோடி மட்டுமே ஜிஎஸ்டியில் வசூலாகியிருந்தது. மார்ச் மாதத்தைப் பொறுத்தவரையில் 75.95 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் 73.48 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2018ஆம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களிலும், 2019ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் மட்டுமே ஜிஎஸ்டியில் 1 லட்சம் கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் மார்ச் மாதத்தில் வசூலான ரூ.1.06 லட்சம் கோடிதான் மிக அதிகமாகும். 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.92,167 கோடியாக மட்டுமே இருந்தது. இது 15.6 விழுக்காடு வளர்ச்சியாகும். 2018-19 நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் மட்டும் 14.3 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share