ஐபிஎல் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கட்டாய வெற்றியை நோக்கி கொல்கத்தா அணியும் முதலிடத்திலிருக்கும் ஹைதராபாத் அணிகளும் மோதின.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, ஷிகர் தவானும், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில் கோஸ்வாமி 35 ரன்களுடன் அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய அந்த அணியின் துருப்புச் சீட்டான கேன் வில்லியம்சன் 17 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியென அதிரடியாக ஆடி 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த தவான் 15.1ஆவது ஓவரில் 141 ரன்னாக ஸ்கோர் இருந்தபோது ஆட்டமிழந்தார். 200 ரன்கள் அடிக்க சூழல் இருந்தபோதும், பின் வரிசையில் வந்தவர்கள் சோபிக்கத் தவற 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களே எடுத்தது ஹைதராபாத் அணி. கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 173 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சுனில் நரைன், கிறிஸ் லின் இணையின் ஓப்பனிங்குடன் ஆட்டத்தைத் தொடங்கியது. வழக்கம்போலவே சுனில் நரைன் வந்த பந்தையெல்லாம் அசால்ட்டாக பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் ஜெட் வேகத்தில் உயர்ந்த ஸ்கோர் 3.3 ஓவரிலேயே 50 ரன்னைத் தாண்டியது.
ஒருவழியாக 4ஆவது ஓவரை வீச வந்த ஷகிப் அல் ஹசன் இந்த இணையைப் பிரித்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரைன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த உத்தப்பா நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் . இதனால் முதல் பவர்ப்ளே முடிவில் 66 ரன்களைக் குவித்திருந்த கொல்கத்தா அணி, பொறுப்பான ஆட்டத்தால் ஆட்டத்தின் 15ஆம் ஓவரில் 132 ரன்கள் எடுத்தது.
லின் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க கடைசி இரண்டு ஓவரில் அந்த அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட, களத்தில் இருந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் கொல்கத்தா அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.
ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா அணிகள் முறையே 1, 2, 3 ஆகிய இடங்களில் உள்ள நிலையில் ராஜஸ்தான் நான்காவது இடத்தில்தான் நீடிக்கிறது. மும்பை அணி வெற்றி பெறுகிற பட்சத்தில் மும்பையை விட ரன்ரேட் குறைவாக உள்ள ராஜஸ்தான் அணியால் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு குறைவு.�,”