மதரா
வெற்றியோ, தோல்வியோ, புயலோ, மழையோ நாட்டுல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அதுல ஒரு போட்டோ வச்சு ரெண்டு டயலாக்கை போட்டு மீம் போட்டாத்தான் இப்ப உள்ள இந்த இணையதலைமுறைக்கு நிம்மதியா இருக்கு.
அதுலயும் 2k கிட்ஸ், 90ஸ் கிட்ஸ்ன்னு பிரிஞ்சு இந்தியா பாகிஸ்தான் மாதிரி மோதிக்கிறதுதான் டிரெண்டாயிப் போச்சு. அந்தக் காலத்துல நாங்க எல்லாம் எப்படி இருந்தோம்னு பழங்கதை பேசுற 90ஸ் கிட்ஸ் ஆளுங்களுக்கு வயசு என்னமோ முப்பதுக்குள்ளதான். ஆனா ஆண்டு அனுபவிச்சு திண்ணையில உட்கார்ந்து பல்குத்துற எஃபெக்ட் கொடுப்பாங்க. அதுல இன்னைக்கு அவங்க அதிகமா போட்ருக்குற பதிவு நாங்க எல்லாம் கவுண்டர் மகான் படங்களைத் தியேட்டருல பார்த்த தலைமுறை அப்படின்னு. தியேட்டர்ல பார்க்காட்டா என்ன மீம்ஸ் மூலமா கவுண்டர் மகான் அவதரிச்சுகிட்டுதானே இருக்கார்.
எல்லா ஊருலயும், எல்லா ஆபிஸ்லயும் எல்லா கேங்குலயும் எல்லாரையும் மட்டம் தட்டுறதுக்குனே ஒரு கேரக்டர் இருக்கும். வயசு வித்தியாசம் பார்க்காம, எவ்வளவு சீரியஸான பிரச்சினையா இருந்தாலும், ‘தெரியும்டா போ போய் கூப்புல உட்காரு’ன்னு சொல்லும். யாராவது கொஞ்சம் ஓவரா துள்ளுனாலோ, இல்ல பிலிம் காட்டுனாலோ ஒரே அப்பு. அவ்வளவுதான்! ஆனா எல்லாருக்கும் பல்பு கொடுக்குற இந்த கேரக்டர் பல்பு வாங்காதா அப்படின்னா அதுவும் இல்ல. கொடுக்குறதுக்கு ஈக்குவலா வாங்கவும் செய்யும். அதுவும் பயங்கர ஜாலியா இருக்கும்.
யாராவது ஒரு ஆள் இதை எப்பவும் செஞ்சாலும் எப்பயாவது இந்த மாதிரியான கேரக்டர் ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருக்கும். அதோட மாடல்தான் கவுண்டர் மகான் என அன்போடு அழைக்கப்படும் கவுண்டமணி.
ஹாலிவுட்டுல பேமஸான லாரல் – ஹார்டி கூட்டணிக்கு சமமா தமிழ்நாட்டுல கவுண்டமணி – செந்தில் காமெடி கூட்டணி சுமார் 20 வருஷத்துக்கும் மேல பல ஹிட் கொடுத்துருக்கு.
காமெடி நடிகர்கள்லாம் இப்ப ஹீரோவாகிட்டாங்கன்னு இன்னைக்கு பில்டப் கொடுத்து பேசிகிட்டு இருக்காங்க. ஆனா கவுண்டர் மகான் அவர் பீக்ல இருந்த பீரியட்ல ரம்யா கிருஷ்ணனுக்கு ஜோடியா டூயட் பாடி நடிச்சுருக்காரு. பத்து வருசத்துக்கு ஒருக்கா தமிழ் சினிமாவோட டிரெண்டு மாறும்; அதுக்கு ஏத்த மாதிரி காமெடி நடிகர்களையும் ஓரங்கட்டிடுவாங்க. ஆனா அதையும் மீறி ஜெயிச்சு நின்னவங்கள்ல கவுண்டமணி முக்கியமானவர்.
குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அப்புறம் செந்தில் -கவுண்டமணி காம்போ ஒண்ணு சேராதபோது ஹீரோக்களோட சேர்ந்து அதகளம் பண்ண ஆரம்பிச்சாரு கவுண்டர். சமயங்கள்ல ஹீரோக்களையே செந்திலா மாத்தி பல்பு கொடுத்துருவாரு. அதுக்காக சில ஹீரோக்கள் இவர் பக்கம் வராம ஓடுனதுகூட நடந்துருக்குன்னு சொல்றாங்க.
நடிப்புக்கு பாடி லாங்குவேஜ் முக்கியம்னு சொல்வாங்க. இவரு விஷயத்துல எல்லா கேரக்டர்லயும் நம்ம ஒரே கவுண்டமணியைத்தான் பார்க்க முடியும். டீக்கடைக்காரர், சைக்கிள் கடைக்காரர், ஈயம் பூசுறவர், மெக்கானிக் அப்படின்னு எத்தனை கேரக்டர்ல வந்தாலும் அவர் நடிப்புல எந்த மாற்றமும் இருக்காது. ஆனா, அதுவே அவருக்கான அடையாளமா மாறிப் போச்சு. எல்லா கதையிலயும் கவுண்டமணியாத்தான் வந்துட்டு போவார். சில சமயங்கள்ல நாம பார்த்துகிட்டு இருக்குறது சினிமா படம்தான் அப்படின்னு சொல்ற மாதிரி கதையை விட்டு வெளியே வந்து நம்மகூட பேசிட்டு மறுபடியும் கதைக்குள்ள போயிடுவாரு. ‘பார்த்தீங்களா மக்களே… இதுக்குலாம் நான் பொறுப்பாக முடியாது’ங்குற மாதிரியான டயலாக்குல இதை செய்வாரு. நாடகத்துல பபூன் இடையில வந்து ஆடியன்ஸோட பேசிட்டு மறுபடி கதைக்குள்ள போவாருல அதுமாதிரி.
நடிக்கிறதுனாகூட பரவாயில்லை கவுண்டரோட டான்ஸ் மூவ் எல்லாத்தையும் பார்த்துட்டா ஒவ்வொருத்தரும் நம்ம நல்ல டான்ஸர்தான்னு முடிவுக்கு வந்துரலாம். இருந்தாலும் அவரை ஹெவியா லைக் பண்ண வைக்குறது அந்த டைமிங்குல வந்து விழுகுற கவுண்டரும், எதுக்காகவும் எவனுக்காகவும் என்னைய மாத்திக்க மாட்டேங்குற ஆட்டிடியூடும்தான்.
இதுலாம் யாரும் சொல்லிக்கொடுத்து வர்றது இல்ல. இயல்பாவே இருக்கணும். சிலர் நம்மளும் இந்த மாதிரி டிரை பண்ணிப் பார்ப்போம்னு டெய்லி லைப்ல அட்டம்ப்ட் பண்ணி பார்த்தா வாய் வீங்கிப் போகும். கவுண்டர் கேமராவுக்கு வெளியேயும் அப்படித்தான் இருந்துருக்காரு. இதை அவர்கூட இருந்த பல ஆக்டர்ஸ், டைரக்டர்ஸ் சொல்லிருக்காங்க.
ஏதாவது ஒரு கூட்டத்துல யாராவது ஒரு ஆள் பந்தா பண்ணுறதை பார்த்துட்டா கவுண்டர் வாய் சும்மா இருக்காது. அதுவும் சினி பீல்டுல இருக்குற ஆள், மேற்படியான ஆள்களை எத்தனை பேரை பார்த்துருப்பாரு. அப்ப எத்தனை பேரு இவரைப் பார்த்து தலை தெறிக்க ஓடிருப்பாங்கன்னு பாருங்க.
பொது இடத்துல மக்களை பார்க்கும்போது இதுல அவர் ரொம்ப தெளிவா இருந்துருக்காரு. என் வேலை நடிக்கிறதோட முடிஞ்சுருச்சு. அதனால இந்த போட்டோ, பப்ளிசிட்டிலாம் வேண்டாம்னு நேரா சொல்லிடுவாரு. இதுனாலயே பல கூட்டங்கள்ல கலந்துகிட்டதும் கிடையாது.
கரகாட்டக்காரன் படத்துல, “என்னடா விளம்பரம்.. இந்த சினிமாகாரங்கதான் அப்படி செய்யுறாங்க, தனக்கு தானே வால்போஸ்டர் அடிச்சு செவத்தை நாறவைக்குறாங்க. ஒண்ணுமே கிடைக்கலன்னா பிறந்தநாள் கொண்டாடுறாங்க. அதாவது 33 வயசுக்கு மேல போறாங்களான்னா போகவும் மாட்டிக்காங்க. அதுலயே நிற்குறாங்க. இவனுங்க மட்டும் தான் பிறந்தாங்களா இந்தியாவுல” அப்படின்னு அப்பவே பல பேர் மூக்கை உடைக்குற மாதிரி வசனம் பேசிட்டாரு. ஆனா இன்னைக்கு 80 வயசுல அவர் பிறந்தநாள் கொண்டாடாட்டாலும் மூன்றாம் தலைமுறை ஆளுங்க அவருக்கு சோசியல் மீடியா முழுக்க போஸ்டர் போட்டுகிட்டு இருக்காங்க.
நேர்ல போய் வாழ்த்து சொல்லி ஒரு போட்டோ எடுக்கலாம்னு ஆசை தான். ஆனா, ‘என்னடா கவுண்டமணிகூட போய் போட்டோ எடுத்துப்போட்டா அத்தனை பயகலும் உனக்கு லைக்ஸ் போடுவாங்கன்னு மனப்பால் குடிக்கிறியா.. இந்த டகால்டி வேலை எல்லாம் வேண்டாம் மவனே’ன்னு எனக்குள்ள இருக்குற கவுண்டமணி குரல் கொடுக்க இந்தப் பதிவை மட்டும் போட்டுட்டு அப்பீட் ஆயிகிடுறேன்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)
**
.
**
[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
.
�,”