சரக்கு மற்றும் சேவை வரியில் 18 மற்றும் 12 விழுக்காடு வரி அடுக்குகளை ஒன்றாக இணைத்து ஒற்றை விகிதமாக மாற்றப்படும் என்ற நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் கருத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி டிசம்பர் 24ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில், “ஜிஎஸ்டியில் தற்போதுள்ள 28 விழுக்காடு வரி நீக்கப்படும். 18 விழுக்காடு மற்றும் 12 விழுக்காடு வரிகள் நீக்கப்பட்டு ஒற்றை நிலையான வரி விதிப்பு கொண்டு வரப்படும். இதனுடன் 5 விழுக்காடு வரி மட்டுமே நடைமுறையில் இருக்கும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 25 ஆம் தேதி இதுதொடர்பாக அடுத்தடுத்து 3 பதிவுகளை இட்டுள்ளார்.
“நேற்றைய தினத்துக்கு முன்புவரை ஜிஎஸ்டியில் ஒற்றை நிலையான விகிதம் என்பது முட்டாள்தனமான யோசனை. ஆனால் நேற்று அதையே அரசாங்கம் தனது இலக்காக அறிவிக்கிறது” என்று சிதம்பரம் சாடியுள்ளார். அடுத்த பதிவில், “ஜிஎஸ்டியிலிருந்து 18 விழுக்காடு வரி விதிப்பைக் குறைக்க வேண்டுமென்று கூறியபோது அது செயல்படுத்த முடியாதது என்று கூறிவந்தார்கள். ஆனால் நேற்று காங்கிரஸின் அசல் கோரிக்கையான 18 விழுக்காடு வரி விதிப்பைத் தனது இலக்காக அறிவித்துள்ளது.
தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வருவாய் நடுநிலை அறிக்கையில் (ஆர்.என்.ஆர்.) ஜிஎஸ்டியில் நிலையான வரி விகிதமாக 15 விழுக்காட்டை விதிக்கலாம் என்றபோது, அதைத் தூக்கி குப்பைத்தொட்டியில் வீசினார்கள். ஆனால் நேற்று அதை மீட்டெடுத்து, நிதியமைச்சரின் மேசை மீது வைத்து, உடனடியாக அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.�,